குளத்தில் தவறி விழுந்து விடிய, விடிய தத்தளித்த மான்
|மூடிகெரேயில் குளத்தில் தவறி விழுந்து விடிய, விடிய தத்தளித்த மானை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
சிக்கமகளூரு:
மூடிகெரேயில் குளத்தில் தவறி விழுந்து விடிய, விடிய தத்தளித்த மானை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
குளத்தில் தவறி விழுந்த மான்
சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா ஹெக்கடலு கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து உணவு தேடி மான் ஒன்று வெளியேறியது. அந்த மான் ஹெக்கடலு கிராமத்தில் உள்ள குளத்துக்கு தண்ணீர் குடிக்க சென்றது. அந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக மான் குளத்தில் தவறி விழுந்ததாக தெரிகிறது.
இதனால் அந்த மான் தண்ணீரில் தத்தளித்தது. அந்த மானால் குளத்தில் இருந்து வெளியே வர முடியவில்லை. இந்த நிலையில் நேற்று காலை அந்தப்பகுதியை சேர்ந்த சிலர் குளத்தின் அருகே சென்றுள்ளனர். அப்போது குளத்தில் மான் ஒன்று தத்தளிப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பத்திரமாக மீட்பு
இதுகுறித்து, அவர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் வனத்துறையினர் குளத்தில் இறங்கி கயிறு கட்டி மானை மீட்டு பத்திரமாக கரைக்கு கொண்டு வந்தனர். இரவில் குளத்தில் தவறி விழுந்த மான், விடிய, விடிய தண்ணீரில் தத்தளித்ததால் மிகுந்த சோர்வுடன் காணப்பட்டது. இதையடுத்து கால்நடை டாக்டர் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டார்.
அவர் மானுக்கு சிகிச்சை அளித்தார். பின்னர் வனத்துறையினர் அந்த மானை வனப்பகுதியில் விட்டனர்.