< Back
தேசிய செய்திகள்
புதிய நாடாளுமன்ற கட்டிடம் வரும் 28-ந்தேதி நாட்டிற்கு அர்ப்பணிப்பு - பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்...!
தேசிய செய்திகள்

புதிய நாடாளுமன்ற கட்டிடம் வரும் 28-ந்தேதி நாட்டிற்கு அர்ப்பணிப்பு - பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்...!

தினத்தந்தி
|
18 May 2023 9:45 PM IST

பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற கட்டிடம் சென்டிரல் விஸ்டாவை வருகிற 28-ந்தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

புதுடெல்லி,

டெல்லியில் செயல்பட்டு வரும் நாடாளுமன்ற கட்டிடம் 100 ஆண்டுகள் பழமையானது. எனவே அதற்கு பதிலாக சென்டிரல் விஸ்டா என்ற பெயரில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு மத்திய அரசு முடிவு செய்தது.

இதற்காக கடந்த 2020-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். ராஜபாதை (கடமை பாதை) சீரமைப்பு, பொதுவான மத்திய செயலகம், பிரதமருக்கான புதிய இல்லம் மற்றும் அலுவலகம், துணை ஜனாதிபதிக்கான புதிய மாளிகை ஆகிய புதிய கட்டுமானங்களின் ஓர் அங்கமாக நாடாளுமன்றம் கட்டப்பட்டு வருகிறது.

டாடா புராஜக்ட்ஸ் நிறுவனம் சார்பில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. நாடாளுமன்ற புதிய கட்டிடம் வருகிற 28-ந்தேதி திறக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் சமீபத்தில் தெரிவித்தன.

இந்த நிலையில் மக்களவை செயலகம் இன்று வெளியிட்டு உள்ள தகவலில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமர் மோடியை இன்று நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவுக்கு வரும்படி அவருக்கு அழைப்பு விடுத்து உள்ளார்.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் கட்டுமான பணிகள் தற்போது நிறைவடைந்து விட்டன. சுயசார்பு இந்தியாவின் வலிமைக்கான அடையாளங்களில் ஒன்றாக இந்த புதிய கட்டிடம் திகழ்கிறது என தெரிவித்து உள்ளது.

இதன்படி, பிரதமர் மோடியால், புதிய நாடாளுமன்ற கட்டிடம் 2023-ம் ஆண்டு மே 28-ந்தேதி நாட்டுக்கு முறைப்படி அர்ப்பணிக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்