கொரோனாவால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நபர் 2 ஆண்டுகளுக்குப் பிறகு உயிருடன் கண்டுபிடிப்பு
|கொரோனாவால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த நபர் 2 ஆண்டுகளுக்குப் பிறகு அகமதாபாத்தில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
போபால்,
கொரோனா காரணமாக உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த நபர் 2 ஆண்டுகளுக்குப் பிறகு அகமதாபாத்தில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக கடந்த 2021-ம் ஆண்டில் மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தைச் சேர்ந்த கமலேஷ் (வயது 30) என்பவர் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் போது உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார். அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவில்லை. இறுதிச் சடங்குகளை குடிமைப் பிரிவு அதிகாரிகள் செய்ததாகக் கூறினர்.
இந்த நிலையில் கமலேஷ் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் உயிருடன் திரும்பியது அவரது குடும்ப உறுப்பினர்கள் உட்பட அனைவரையும் திகைக்க வைத்துள்ளது. அவர் குஜராத்தின் அகமதாபாத்தில் ஒரு கும்பலுடன் இருப்பதாகவும் தினமும் போதை ஊசி எடுப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கமலேஷின் மனைவி மற்றும் குடும்பத்தினர் அவரை அடையாளம் கண்டுள்ளனர். இது தொடர்பாக தார் மாவட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.