வயநாடு நிலச்சரிவு: தேசிய பேரிடராக அறிவிக்க சசி தரூர் கோரிக்கை
|வயநாடு நிலச்சரிவை கடுமையான இயற்கையின் பேரிடராக அறிவிக்குமாறு அமித்ஷாவுக்கு சசி தரூர் கடிதம் எழுதியுள்ளார்.
புதுடெல்லி,
வயநாடு நிலச்சரிவுகளை கடுமையான இயற்கைப் பேரிடராக அறிவிக்குமாறு திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி. சதி தரூர், உள்துறை மந்திரி அமித்ஷாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அமித்ஷாவுக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது, "கேரளத்தின் வயநாட்டில் தொடர்ச்சியான பேரழிவுகரமான நிலச்சரிவுகள் ஏற்பட்டதாகவும், இதில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகியும், மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கி காணாமல் போயுள்ளனர்.
நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இந்த பேரழிவானது பல மரணங்களையும், சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாக ஆயுதப்படை, கடலோரக் காவல் படை, தேசிய பேரிடர் மீட்புப்படை உள்ளிட்ட பிற முகமைகள் கூட்டாக ஒன்றிணைந்து மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
நிலச்சரிவால் எண்ணற்ற பாதிப்பும், பலியும் ஏற்பட்டுள்ளன. எனவே வயநாட்டு மக்களுக்கு அனைத்துவிதமான ஆதரவையும் வழங்குவது மிகவும் முக்கியமானது. அதேசமயம், இந்தப் பேரழிவை 'கடுமையான இயற்கையின் பேரிடர்' என்று அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டம் (MPLADS) வழிகாட்டுதல்களில், அவர்கள் தங்களின் நிதியிலிருந்து பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு ரூ.1 கோடி வரையிலான பணிகளைப் பரிந்துரைக்க அனுமதிக்கும்.
இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளுக்கு விருப்பமுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாராளமாக நிதி வழங்க முடியும். மீட்பு, நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்கான கடினமான முயற்சிகளை ஆதரிப்பதில் இது நிச்சயமாக விலைமதிப்பற்றதாக இருக்கும். இந்த கோரிக்கையை உங்கள் அன்பான மற்றும் அனுதாபத்துடன் பரிசீலிப்பீர்கள் என்று நம்புகிறேன்." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.