பால் விலையை உயர்த்தும் விவகாரத்தில் பொதுமக்கள், விவசாயிகள் பாதிக்காமல் முடிவு - பசவராஜ் பொம்மை
|பால் விலையை உயர்த்தும் விவகாரத்தில் பொதுமக்கள், விவசாயிகள் பாதிக்காமல் முடிவு என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு:
பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களிடம் கூறியதாவது:-
மாநிலத்தில் பால் விலையை உயர்த்தும் விவகாரம் குறித்து பால் கூட்டமைப்புகளின் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. பால் விலையை உயர்த்தும்படி பால் கூட்டமைப்புகளின் தலைவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். பால் கூட்டமைப்புக்கு ஏற்படும் நஷ்டம், பிற மாநிலங்களில் உள்ள பால் விலை, நஷ்டத்தை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கமாக அரசிடம் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பாதிக்கப்படாதவாறு பால் விலையை உயர்த்தும் விவகாரத்தில் அரசு உரிய முடிவு எடுக்கும். பால் கூட்டமைப்பு சார்பில் ஒரு லிட்டர் பாலுக்கு ரூ.3 உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். கர்நாடக பால் கூட்டமைப்பும், அரசின் ஒரு அங்கமாகும். பால் விலை உயர்த்தும் விவகாரத்தில் பால் கூட்டமைப்புக்கு அரசு சார்பில் சில ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் நலன் மீதும் அரசுக்கு அக்கறை உள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தி மக்களுக்கு தொந்தரவு கொடுக்கவும் விரும்பவில்லை.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.