< Back
தேசிய செய்திகள்
டுபோலெவ்-142 போர் விமானத்தை கார்வாரில் நினைவுச்சின்னமாக வைக்க முடிவு
தேசிய செய்திகள்

'டுபோலெவ்-142' போர் விமானத்தை கார்வாரில் நினைவுச்சின்னமாக வைக்க முடிவு

தினத்தந்தி
|
28 Sept 2023 2:11 AM IST

இந்திய கடற்படையில் சேவையாற்றி விடைபெற்ற டுபோலெவ் போர் விமானத்தை கார்வாரில் நினைவுச்சின்னமாக வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி அரக்கோணத்தில் இருந்து அந்த போர் விமானத்தை பிரித்து அதன் பாகங்கள் 9 லாரிகளில் கொண்டுவரப்பட்டுள்ளன.

கார்வார்:

இந்திய கடற்படையில் ரஷியா தயாரிப்பான டுபோலெவ்-142 (டி.யூ.-142) என்ற போர் விமானம் கடந்த 1988-ம் ஆண்டு சேவையை தொடங்கியது. இந்த போர் விமானம் கடலோர பகுதிகளில் ரோந்துப் பணியை மேற்கொண்டதுடன், நீர்மூழ்கி கப்பல்களை அழிக்கும் திறன் கொண்டது. 29 ஆண்டுகள் இந்திய கடற்படையில் சேவையாற்றிய இந்த போர் விமானம் கடந்த 2017-ம் ஆண்டு சேவையை நிறைவு செய்து விடைபெற்றது. இதைத்தொடர்ந்து அந்த போர் விமானம் தமிழ்நாடு ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் உள்ள ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையே இந்திய கடற்படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற டுபோலெவ் போர் விமானத்தை நினைவுச்சின்னமாக மாற்ற முடிவு செய்திருப்பதாகவும், எனவே அந்த விமானத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கர்நாடக அரசு அப்போதே மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது.

மேலும் கார்வாரில் உள்ள கடம்பா கடற்படை தளம், உத்தரகன்னடா மாவட்ட நிர்வாகம் இடையே இதுதொடர்பாக கடந்த 2020-ம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி சேவையில் இருந்து விடைபெற்ற டுபோலெவ் போர் விமானத்தை கடம்பா கடற்படை தளம் பகுதியில் நினைவுச்சின்னமாக வைக்க முடிவு செய்யப்பட்டது. அந்த விமானம் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதமே கார்வாருக்கு கொண்டுவரப்பட இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக 3 ஆண்டுகளாக அந்த போர் விமானத்தை கார்வாருக்கு கொண்டுவருவதில் சிக்கல் ஏற்பட்டது. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து அந்த போர் விமானத்தை கொண்டுவரும் பணி முடுக்கிவிடப்பட்டது. அதன்படி கடந்த சில வாரங்களாக அரக்கோணத்தில் உள்ள ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமான தளத்தில் டுபோலெவ் போர் விமானம் தனித்தனி பாகங்களாக பிரிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து அங்கிருந்து அந்த விமான உதிரி பாகங்களை ஏற்றிக்கொண்டு 9 ராட்சத லாரிகள் கடந்த 5 நாட்களுக்கு முன்பு கார்வார் நோக்கி புறப்பட்டன. மொத்தம் 50 டன் விமான உதிரி பாகங்கள் லாரிகளில் கொண்டு வரப்பட்டன.

நேற்று முன்தினம் அந்த 9 லாரிகளும் கார்வார் வந்து சேர்ந்தன. கார்வார் கடம்பா கடற்படை தளம் அருகே, விமான உதிரி பாகங்களை ஏற்றி வந்த லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தாகூர் கடலோர சேப்பல் கடற்படை அருங்காட்சியகத்தின் அருகிலேயே அந்த போர் விமானத்தை நினைவுச்சின்னமாக வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இன்னும் ஓரிரு நாளில் கிரேன்கள் உதவியுடன் விமான பாகங்கள் லாரிகளில் இருந்து இறக்கி, அதனை இணைத்து போர் விமானத்தை உருவாக்கி அங்கு நினைவுச்சின்னமாக வைக்கும் பணி தொடங்க உள்ளதாக கடம்பா கடற்படை தள அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்