< Back
தேசிய செய்திகள்
2024 நாடாளுமன்ற தேர்தல் பற்றிய எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க முடிவு; சரத் பவார் அறிவிப்பு
தேசிய செய்திகள்

2024 நாடாளுமன்ற தேர்தல் பற்றிய எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க முடிவு; சரத் பவார் அறிவிப்பு

தினத்தந்தி
|
8 Jun 2023 3:52 PM IST

2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க சரத் பவார் முடிவு செய்து உள்ளார்.

புனே,

2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில், ஆளும் பா.ஜ.க.வுக்கு போட்டியாக களமிறங்க ஏதுவாக, பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

இதற்காக காங்கிரஸ், ஆம் ஆத்மி, இடதுசாரிகள் உள்பட பல்வேறு கட்சிகளின் முக்கிய தலைவர்களை அவர் சந்தித்து பேசி வருகிறார். இதனை தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் கூட்டம் வரும் 12-ந்தேதி பாட்னாவில் நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டது.

எனினும், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திஅமெரிக்காவில் இருக்கிறார். அவர் இந்த கூட்டத்தில் பங்கேற்க முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால், எதிர்க்கட்சிகள் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் அடங்கிய கூட்டம் வரும் 23-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார், தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உள்பட பலர் பங்கேற்க உள்ளனர்.

வருகிற 23-ந்தேதி நடைபெற உள்ள எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் முடிவு செய்து உள்ளார். இதனை அவர் இன்று அறிவித்து உள்ளார்.

இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய பவார், பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் வருகிற 23-ந்தேதி கூட்டம் ஒன்றை நடத்த அழைப்பு விடுத்து உள்ளார். அவர் என்னையும் அதில் கலந்து கொள்ளும்படி அழைத்து உள்ளார்.

நாட்டில் எதிர்க்கட்சி தலைவர்களை அவர் அழைத்து உள்ளார். நான் கூட்டத்திற்கு செல்வேன். தேசிய விவகாரம் ஒன்றில் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டிய தேவை உள்ளது என கவனத்தில் கொண்டு அவர் அழைப்பு விடுத்து உள்ளார் என பவார் கூறியுள்ளார்.

இதற்கு முன்பு, பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் பாட்னா நகரில் இன்று ஊடகங்களிடம் பேசும்போது, 15 கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கும்.

கட்சிகளின் முக்கிய தலைவர்கள் வர இருக்கின்றனர். எனினும், தெலுங்கானா முதல்-மந்திரி சந்திர சேகர ராவ் பங்கேற்பது பற்றி உறுதி செய்யப்படவில்லை. அவர் எதுவும் தன்னிடம் கூறவில்லை என்று கூறினார்.

மேலும் செய்திகள்