பெங்களூரு புறநகர் ரெயில் திட்டத்திற்காக ரூ.7,438 கோடி கடன் வாங்க முடிவு; தொழில்துறை மந்திரி எம்.பி.பட்டீல் பேட்டி
|பெங்களூரு புறநகர் ரெயில் திட்டத்திற்காக ரூ.7,438 கோடி கடன் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தொழில்துறை மந்திரி எம்.பி.பட்டீல் கூறியுள்ளார்.
பெங்களூரு:
தொழில்துறை, உள்கட்டமைப்பு துறை மந்திரி எம்.பி.பட்டீல் பெங்களூருவில் நேற்று லிங்கராஜபுரம், ஹெப்பால், யஷ்வந்தபுரத்தில் நடைபெற்று வரும் புறநகர் ரெயில் திட்ட பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அவருடன் மின்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் மற்றும் உயர் அதிகாரிகள் இருந்தனர். இந்த ஆய்வுக்கு பிறகு எம்.பி.பட்டீல் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பெங்களூரு புறநகர் ரெயில் திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த பணிகளை நான் இன்று(நேற்று) ஆய்வு செய்தேன். 2-ம் கட்ட பணிகளுக்காக தென்மேற்கு ரெயில்வேயிடம் இருந்து 157 ஏக்கர் நிலத்தை குத்தகை அடிப்படையில் பெற்றுள்ளோம். தனியாரிடம் இருந்து 5.11 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளோம். இதில் 15 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.
அடுத்தக்கட்ட பணியின்போது, ஹீலலிகே-ராஜனுகுன்டே, காரிடார்-3-ல் பெங்களூரு-தேவனஹள்ளி பாதை இணைக்கப்படும். இது மட்டுமின்றி சிக்பள்ளாப்பூர், மைசூரு, மாகடி, துமகூரு, கவுரிபித்தனூர், கோலார் மற்றும் ஓசூருக்கு புறநகர் ரெயில் திட்டம் விஸ்தரிக்கப்படும். இதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். இதன் மூலம் புறநகர் ரெயில் திட்டத்தின் நீளம் 452 கிலோ மீட்டராக அதிகரிக்கும்.
புறநகர் ரெயில் திட்டத்திற்கு ரூ.15 ஆயிரத்து 767 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு நடப்பு ஆண்டில் மாநில அரசு ரூ.1,000 கோடி ஒதுக்கி உள்ளது. ரூ.7 ஆயிரத்து 438 கோடி கடன் பெற முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு எம்.பி.பட்டீல் கூறினார்.