< Back
தேசிய செய்திகள்
அரசியலமைப்புக்கு எதிராக செயல்பட்டால் மட்டுமே பஜ்ரங்தள அமைப்புக்கு தடை விதிப்பது குறித்து முடிவு - சித்தராமையா
தேசிய செய்திகள்

அரசியலமைப்புக்கு எதிராக செயல்பட்டால் மட்டுமே பஜ்ரங்தள அமைப்புக்கு தடை விதிப்பது குறித்து முடிவு - சித்தராமையா

தினத்தந்தி
|
7 May 2023 5:09 AM IST

அரசியலமைப்பு எதிராக செயல்பட்டால் மட்டுமே பஜ்ரங்தள அமைப்புக்கு தடை விதிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா திடீரென்று ‘பல்டி’ அடித்துள்ளார்.

பஜ்ரங்தள அமைப்புக்கு தடை

கர்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் பஜ்ரங்தள அமைப்புக்கு தடை விதிக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. இதற்கு பா.ஜனதா தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக பிரதமர் மோடி கர்நாடகத்தில் ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் பஜ்ரங்பலி என்ற கோஷத்தை எழுப்பி வருகிறார். பஜ்ரங்தள அமைப்பு தடை விவகாரத்தை பா.ஜனதா கையில் எடுத்து கொண்டு பேசி வருவது, காங்கிரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. சட்டசபை தேர்தலில் இந்த விவகாரம் பின்னடைவை ஏற்படுத்தலாம் என்றும் சொல்லப்படுகிறது. இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவிடம் ஒரு தனியார் தொலைகாட்சியினர் கேள்வி எழுப்பி இருந்தனர். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

அரசியலமைப்புக்கு எதிராக...

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியாகும் முன்பாக நான் முழுமையாக படிக்கவில்லை. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் பஜ்ரங்தள அமைப்புக்கு தடை விதிக்கப்படும் என்பதை சேர்த்திருந்தது தெரியாது. அதே நேரத்தில் எங்களது கட்சியின் தேர்தல் அறிக்கையில் எந்த ஒரு அமைப்பும், அரசியலமைப்புக்கு எதிராக செயல்படும் பட்சத்தில், அதன்மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்று தான் கூறி இருக்கிறோம். அந்த அமைப்புகள் மீது நடவடிக்கை எடுப்பது அவசியமானது.

சாதி மற்றும் மதத்தின் பெயரில் மக்களின் அமைதியை கெடுப்போரின் மீதும், சம்பந்தப்பட்ட அமைப்பின் மீதும் தான் சட்டப்படி நடவடிக்கை எடுத்து தடை விதிப்போம் என்றும் கூறியுள்ளோம். அதனால் பஜ்ரங்தள அமைப்பும் அரசியலமைப்புக்கு எதிராக செயல்பட்டால் மட்டுமே தடை செய்வது பற்றி முடிவு செய்வோம். இந்த விவகாரத்தை கையில் எடுத்து பா.ஜனதாவினர் பிரசாரம் செய்கிறார்கள். சட்டசபை தேர்தலில் பஜ்ரங்தள விவகாரம் காங்கிரசுக்கு எந்த பின்னடைவையும் ஏற்படுத்தாது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்