நாடு முழுவதும் 42 ஆயிரம் கிலோ போதை பொருளை அழிக்க முடிவு
|நாடு முழுவதும் 14 இடங்களில் மொத்தம் 42 ஆயிரம் கிலோ எடை கொண்ட போதை பொருள் நாளை அழிக்கப்படும் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி,
இந்தியா சுதந்திரம் பெற்றதன் 75வது ஆண்டு கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் சிறப்புடன் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நாளை போதை பொருள் அழிப்பு தினம் நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.
இதன்படி, நாடு முழுவதும் 14 இடங்களில் மொத்தம் 42 ஆயிரம் கிலோ எடை கொண்ட போதை பொருட்கள் அழிக்கப்படும். இதற்கான நடவடிக்கைகளை மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் மேற்கொள்ள உள்ளது. இதனை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.
இந்த நிகழ்ச்சியானது, அசாமின் கவுகாத்தி, உத்தர பிரதேசத்தின் லக்னோ, மராட்டியத்தின் மும்பை உள்ளிட்ட நகரங்களிலும், முந்த்ரா, பாட்னா மற்றும் சிலிகுரி உள்ளிட்ட நகரங்களிலும் நடத்தப்பட உள்ளன.
இதனை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் காணொலி வாயிலாக பார்வையிடுகிறார். அதன்பின்னர் அவர் அதிகாரிகளுக்கு உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.