மும்பை: கடன் தொல்லையால் மனைவியைக் கொன்று கணவன் தற்கொலை
|மும்பையில் கடன் தொல்லையால் மனைவியைக் கொன்று, கணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை,
மத்திய மும்பையில் கடன் தொல்லையால் நபர் ஒருவர் தனது மனைவியைக் கொன்று பின்னர் விஷம் குடித்து தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாதர் பகுதியில் உள்ள குடியிருப்பைச் சேர்ந்தவர் வினோத் சம்ஜிஸ்கர் (வயது 43). இவரது மனைவி சுபாங்கி. இந்த தம்பதியருக்கு 17 வயது மகள் ஒருவர் இருக்கிறார். இந்த நிலையில் நேற்று காலையில் அவர் கல்லூரிக்கு சென்றபோது, சம்ஜிஸ்கர் தனது மனைவியைக் கொன்றுவிட்டு, பின்னர் விஷம் குடித்து தானும் தற்கொலை செய்து கொண்டார்.
மதியம் உறவினர்கள் அவர்களது வீட்டிற்குச் சென்றபோது, இருவரும் படுக்கையில் அசைவற்று, கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வீட்டில் தற்கொலைக் குறிப்பு ஒன்றை போலீசார் கைப்பற்றியுள்ளளனர். அந்த குறிப்பில், சம்ஜிஸ்கர் தனது மனைவியைக் கொன்றுவிட்டதாகவும், 'கடன் சுமையால்' தனது வாழ்க்கையை முடித்துக் கொள்வதாகவும் எழுதியுள்ளார். எனினும், பெண் எப்படி கொல்லப்பட்டார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இது தொடர்பாக தாதர் காவல் நிலையத்தில் கொலை மற்றும் தற்கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.