கடனை திரும்ப கேட்பது தற்கொலைக்கு தூண்டும் செயல் இல்லை: கர்நாடக ஐகோர்ட்டு கருத்து
|கொடுத்த கடனை திரும்ப கேட்பது தற்கொலைக்கு தூண்டும் செயல் இல்லை என்று கர்நாடக ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
பெங்களூரு:
பெங்களூரு பன்னரகட்டாவை சேர்ந்தவர் ராஜு. இவரது மனைவி கவிதா. இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 25-ந் தேதி வீட்டில் தனியாக இருந்த ராஜு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இருந்தார். ராஜு தற்கொலை செய்யும் முன்பாக மங்கலகவுரி என்பவரிடம் வட்டிக்கு கடன் வாங்கி இருந்தார். பணம் கேட்டு மங்கலகவுரி தொல்லை கொடுத்ததால் ராஜு தற்கொலை செய்திருப்பதாக கவிதா குற்றச்சாட்டு கூறி இருந்தார்.
இதுதொடர்பாக பன்னரகட்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து மங்கலகவுரியை கைது செய்திருந்தார்கள். அவர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவாகி இருந்தது. இந்த வழக்கில் பெங்களூரு கோர்ட்டு மங்கலகவுரிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு கூறி இருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் மங்கலகவுரி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டு இருந்தது.
அந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டு நீதிபதி சிவசங்கர அமரண்ணவர் முன்னிலையில் நடைபெற்று வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், கொடுத்த கடனை திரும்பி கேட்டதால் ராஜு தற்கொலை செய்ததாக கூறி மனுதாரருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார். இதற்கு அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், கடனை திரும்ப கொடுக்கவில்லை என்றால், கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார், இதுபோன்ற காரணங்களால் தான் ராஜு தற்கொலை செய்திருப்பதாக வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சிவசங்கர அமரண்ணவர், கொடுத்த கடனை திரும்ப கேட்பது தற்கொலைக்கு தூண்டும் செயல் இல்லை. கடன் வாங்கியவர் திரும்ப கொடுப்பதாக கூறி தான் பெற்றிருப்பார். அதனை கேட்பது தொல்லை கொடுப்பதாக கருத முடியாது. இந்த வழக்கில் தற்கொலைக்கு தூண்டியதற்கான சாட்சி ஆதாரங்களோ, மிரட்டியதற்கான ஆதாரங்களோ இல்லை என்பதால், மனுதாரர் மீது பதிவான வழக்கு ரத்து செய்யப்படுகிறது. அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையும் ரத்து செய்யப்படுவதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.