கடன் தொல்லையால் விஷம் குடித்து விவசாயி தற்கொலை
|உப்பள்ளி அருகே கடன் தொல்லையால் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்துகொண்டார்.
உப்பள்ளி;
தார்வார் மாவட்டம் நவலகுந்து தாலுகா மொரபா கிராமத்தை சேர்ந்தவர் மகாந்தேஷ் மல்லப்பா(வயது 35). விவசாயியான இவர், தனக்கு சொந்தமான 1½ ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்துவந்தார். இதற்காக அவர், வங்கியில் ரூ.2 லட்சம் வரை கடன் வாங்கி இருந்தார்.
ஆனால் விவசாயத்தில் மகாந்தேசுக்கு போதிய லாபம் கிடைக்கவில்லை. இதற்கிடையே வாங்கிய கடனை திருப்பி செலுத்தும்படி வங்கியில் இருந்து நோட்டீசு வந்துள்ளது. இதனால் கடன் தொல்லையில் சிக்கிய மகாந்தேஷ் மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து மகாந்தேஷ் தற்கொலைக்கு முயன்றார்.
அவரை, அப்பகுதியினர் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக உப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் நேற்று சிகிச்சை பலனின்றி மகாந்தேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நவலகுந்து புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.