< Back
தேசிய செய்திகள்
கடன் சுமை... 4-வது மகளின் திருமண நாளில் தூக்கு போட்டு தந்தை தற்கொலை
தேசிய செய்திகள்

கடன் சுமை... 4-வது மகளின் திருமண நாளில் தூக்கு போட்டு தந்தை தற்கொலை

தினத்தந்தி
|
28 Nov 2022 11:46 AM GMT

உத்தர பிரதேசத்தில் அதிகரித்த கடன் சுமையால் தனது 4-வது மகளின் திருமணம் நடைபெற இருந்த நாளில் அவரது தந்தை தூக்கு போட்டு தற்கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது.



லக்னோ,


உத்தர பிரதேசத்தின் லக்னோ நகரில் மோகன்லால் கஞ்ச் என்ற பகுதியில் வசித்து வந்தவர் சுனில் திவிவேதி. அரவை மில்லில் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். விவசாயியாகவும் இருந்துள்ளார்.

இவருக்கு 5 மகள்கள் மற்றும் அங்கூர் என்ற ஒரு மகன் உள்ளனர். இவர்களில் 3 மகள்களுக்கு திருமணம் நடந்து விட்டது. 4-வது மகளான நவ்யாவுக்கு வரன் பார்த்துள்ளார். நேற்று நவ்யாவின் திருமணம் நடைபெற இருந்தது.

ஆனால், அவர் குடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார் என கூறப்படுகிறது. இதனால், அவரது குடும்பத்தினர் அவரை கண்டித்துள்ளனர். இதன்பின், சுனில் அறைக்கு சென்று கதவை பூட்டி கொண்டார்.

அவர் நீண்டநேரம் வெளியே வராத நிலையில், குடும்பத்தினர் சந்தேகம் அடைந்து சென்று பார்த்து உள்ளனர். இதில், அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்தது தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தனர்.

சுனில், தன்னுடைய 3 மகள்களுக்கும் கடன் வாங்கியே திருமணம் செய்து வைத்து உள்ளார். நவ்யாவுக்கும் கடன் வாங்கி திருமணம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். இதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது என உறவினர்கள் கூறியுள்ளனர்.

இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 5 மகள்களின் தந்தையான சுனில், தனது 4-வது மகளின் திருமண நாளில் தூக்கு போட்டு தற்கொலை செய்தது அந்த பகுதியில் வசிப்போரிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்