மாநிலங்களவையில் இன்று மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீது விவாதம்
|நாடாளுமன்றத்தில் காரசார விவாதத்துக்கு பின்னர் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நேற்று மாலை நிறைவேறியது.
புதுடெல்லி,
புதிய நாடாளுமன்ற கட்டிடம் நேற்று முன்தினம் செயல்பாட்டுக்கு வந்தது. புதிய நாடாளுமன்றத்தில் முதல் அலுவலாக, மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை மத்திய சட்ட மந்திரி அர்ஜுன்ராம் மேக்வால் தாக்கல் செய்தார்.
இந்நிலையில், நேற்று மக்களவை கூடியவுடன், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை சபையின் பரிசீலனை மற்றும் நிறைவேற்றத்துக்காக அர்ஜுன்ராம் மேக்வால் முன்வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
"மகளிர் மசோதா, மிகவும் முக்கியமானது. இதை ஒருமனதாக நிறைவேற்றி தாருங்கள். கருத்தொற்றுமை ஏற்பட்டால் நல்லது. விவாதத்தில் கூறப்படும் ஒவ்வொரு யோசனையையும் நாங்கள் பரிசீலிப்போம். நாடாளுமன்றம் முடிவு செய்தால், மகளிர் இடஒதுக்கீட்டை 15 ஆண்டுகளுக்கு மேலும் நீட்டிக்க முடியும்."
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர், மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீது விவாதம் தொடங்கியது. எதிர்க்கட்சிகள் தரப்பில், நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி, விவாதத்தை தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது:-
"என் வாழ்க்கையில் இது ஒரு வருத்தமான தருணம். என் வாழ்க்கை துணை ராஜீவ்காந்தி, உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க அரசியல் சட்ட திருத்த மசோதாவை முதல்முறையாக கொண்டு வந்தார்.
அந்த மசோதா, மக்களவையில் நிறைவேறினாலும், மாநிலங்களவையில் 7 ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது. பின்னர், பிரதமர் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், அந்த மசோதா 2 அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.
அதன் பலனாக, தற்போது நாடு முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் சுமார் 15 லட்சம் பெண் தலைவர்கள் பதவி வகித்து வருகிறார்கள். ஆனால், ராஜீவ்காந்தியின் கனவு, பாதிதான் நனவாகி இருக்கிறது. இந்த மசோதா நிறைவேறினால்தான், அவரது கனவு முழுமையாக நனவாகும். மசோதாவை காங்கிரஸ் ஆதரிக்கிறது. மசோதா நிறைவேறினால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம்.
ஆனால், எங்களுக்கு ஒரு கவலை இருக்கிறது. பெண்கள் தங்கள் அரசியல் பொறுப்புகளை ஆற்ற 13 ஆண்டுகளாக காத்திருக்கிறார்கள். அவர்களிடம் இன்னும் சில ஆண்டுகள் காத்திருக்குமாறு கூறுகிறீர்கள். இந்திய பெண்களிடம் இப்படி நடந்து கொள்வது முறையானதுதானா?
எனவே, மகளிர் இடஒதுக்கீட்டை உடனடியாக அமலுக்கு கொண்டுவர வேண்டும். மேலும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, எஸ்.சி., எஸ்.டி. ஆகிய பிரிவுகளுடன், ஓ.பி.சி. பெண்களுக்கும் உள்ஒதுக்கீடு அளிக்க வேண்டும்.
இதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். பெண்களின் பங்களிப்புக்கு நன்றி தெரிவிக்க இதுதான் மிகவும் சரியான தருணம்.
எனவே, வழியில் தென்படும் அனைத்து முட்டுக்கட்டைகளையும் அகற்றி, மகளிர் இடஒதுக்கீட்டை கூடிய விரைவில் அமல்படுத்துமாறு காங்கிரஸ் கட்சி சார்பில் வலியுறுத்துகிறேன். இது, தேவையானது மட்டுமல்ல, சாத்தியமானதும் ஆகும்."
இவ்வாறு அவர் பேசினார்.
விவாதத்தில் பேசிய பல்வேறு கட்சி உறுப்பினர்கள், பெண்களுக்கான இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதைப்போல மசோதாவில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கும், சிறுபான்மையினருக்கும் உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகளும் வலியுறுத்தின.
இந்த கோரிக்கைகளுக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி ஸ்மிரிதி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். விவாதத்தின்போது இடைமறித்து பேசிய அவர் கூறியதாவது:-
"மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது அரசியல் சாசனத்தால் தடை செய்யப்பட்டு உள்ளது. இது எதிர்க்கட்சிகளுக்கு தெரியாதா? மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை போன்றவற்றை செய்தபிறகே இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது அரசியல் சாசன நடைமுறை.
எனவே இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த கோரும் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு, அரசியல் சாசன நடைமுறை பின்பற்றப்படக்கூடாது என்பதுதான் விருப்பமா? அரசியலமைப்பு சட்டத்தை நாம் கடைப்பிடிக்க வேண்டாமா? பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை போடாதது நிம்மதியை அளித்துள்ளது."
இவ்வாறு ஸ்மிரிதி இரானி கூறினார்.
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசியபோது, ''வருகிற நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன், மக்கள்தொகை கணக்கெடுப்பும், தொகுதி மறுவரையறையும் நடத்தப்பட்டு, மகளிர் இடஒதுக்கீடு அமலுக்கு கொண்டுவரப்படும்'' என்று உறுதி அளித்தார்.
விவாதத்தில் மொத்தம் 60 எம்.பி.க்கள் பேசினர். அவர்களில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி உறுப்பினர் அசாதுதின் ஒவைசி மட்டும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறினார். விவாதத்தில் பேசிய எம்.பி.க்களில் 27 பேர் பெண்கள் ஆவர். அவர்களில் நடிகை சுமலதா, ஜோதிமணி ஆகியோரும் அடங்குவர். அனைவரும் மசோதாவை ஆதரித்து பேசினர்.
நேற்று இரவு 7 மணிக்கு பிறகும் விவாதம் நீடித்தது. விவாதத்துக்கு மத்திய சட்ட மந்திரி அர்ஜுன்ராம் மேக்வால் பதில் அளித்தார். அவர் பேசியதாவது:-
"இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கு முன்பு, எதற்காக மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை நடத்த வேண்டும் என்று பெரும்பாலான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். அரசியல் சட்டத்தில் கூறி இருப்பதற்கு ஏற்பவே இந்த நிபந்தனைகள் சேர்க்கப்பட்டுள்ளன. மத்திய அரசு உடனடியாக இடஒதுக்கீட்டை அமல்படுத்த சம்மதித்தால், அது அரசியல் சட்ட உட்பிரிவுகளை மீறியதாக ஆகிவிடும்.
ஏனென்றால், எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டாலும், யாராவது சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்துவிடக்கூடும். அப்படிச்செய்தால், மகளிர் இடஒதுக்கீடு கோர்ட்டில் சிக்கிக்கொள்ளும்.
தொழில்நுட்ப காரணங்களுக்காக இடஒதுக்கீடு மசோதா சிக்கிக்கொள்வதை அனுமதிக்க முடியாது. சில உறுப்பினர்கள், மசோதாவுக்கு அரசியல் சாயம் பூச முயற்சிக்கின்றனர். மசோதாவை நிறைவேற்றுவதற்கான தலைமைப்பண்பு மோடி அரசுக்கு இருக்கிறது. முந்தைய அரசுக்குத்தான் இல்லை.
சிலர் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு உள்ஒதுக்கீடு கேட்கின்றனர். அம்பேத்கரை தேர்தலில் காங்கிரஸ் தோற்கடித்தது. அவருக்கு 'பாரத ரத்னா' விருது வழங்க மறுத்தது. அவரது படத்தை நாடாளுமன்ற மைய மண்டபத்தில் வைக்க மறுத்தது."
இவ்வாறு அவர் பேசினார்.
காரசார விவாதத்துக்கு பின்னர், மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீது ஓட்டெடுப்பு நடந்தது. மசோதாவுக்கு ஆதரவாக 454 எம்.பி.க்கள் ஓட்டு போட்டனர். எதிராக 2 எம்.பி.க்கள் மட்டும் வாக்களித்தனர். எனவே, மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமோக ஆதரவுடன் நிறைவேறியது.
நடப்பு கூட்டத்தொடரில் மக்களவையில் முதலாவதாக நிறைவேற்றப்பட்ட மசோதா இதுவாகும். புதிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட முதல் மசோதா என்ற பெருமையையும் இம்மசோதா பெறுகிறது. இதைத்தொடர்ந்து, மாநிலங்களவையில் இன்று (வியாழக்கிழமை) மகளிர் மசோதா விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.