மராட்டியத்தில் கனமழை, வெள்ளம்; பலி எண்ணிக்கை 89 ஆக உயர்வு
|மராட்டியத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தால் பலியானோர் எண்ணிக்கை 89 ஆக அதிகரித்துள்ளது.
மும்பை,
மராட்டிய மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. மும்பை, புனே, சதரா, சோலாபூர், சங்லி, கோல்ஹபூர், ரத்னகிரி, சிந்துதுர்க், துலி, நந்தூர்பார், நாசிக் என மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
கனமழை காரணமாக மாநிலத்தில் உள்ள பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளன. மேலும், பல்வேறு சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மராட்டியத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளம் உள்பட இயற்கை பேரிடரில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 89 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
கனமழை, வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் கனமழை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.