< Back
தேசிய செய்திகள்
கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதிகள் 6 பேருக்கு கொலை மிரட்டல்
தேசிய செய்திகள்

கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதிகள் 6 பேருக்கு கொலை மிரட்டல்

தினத்தந்தி
|
25 July 2023 12:15 AM IST

பாகிஸ்தான் வங்கி கணக்குக்கு ரூ.50 லட்சத்தை செலுத்த வேண்டும், இல்லையெனில் கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதிகள் 6 பேரை கொலை செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தலைமறைவான மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

பெங்களூரு:

பெங்களூருவில் உள்ள கர்நாடக ஐகோர்ட்டில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்து வருபவர் முரளிதர். இவருடைய வாட்ஸ்-அப்புக்கு ஒரு குறுந்தகவல் மர்மநபர்களால் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. அதில், கர்நாடக ஐகோர்ட்டில் நீதிபதிகளாக பணியாற்றும் 6 பேருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

அதாவது பாகிஸ்தான் நாட்டில் உள்ள வங்கி கணக்குக்கு ரூ.50 லட்சத்தை டெபாசிட் செய்ய வேண்டும், அவ்வாறு செய்யாவிட்டால் ஐகோர்ட்டில் நீதிபதிகளாக இருக்கும் முகமது நவாஜ், நரேந்திர பிரசாத், அசோக், நிஜகன்னனவர், சந்தேஷ், நடராஜன் ஆகிய 6 பேரையும் கொலை செய்து விடுவதாக மர்மநபர்கள் மிரட்டல் விடுத்து குறுந்தகவல் அனுப்பி வைத்திருந்தார்கள்.

அந்த குறுந்தகவல் இந்தி, உருது, ஆங்கிலம் ஆகிய 3 மொழிகளிலும் இருந்தது. மேலும் ரூ.50 லட்சம் கொடுக்கவில்லை எனில் துபாய் நாட்டை சேர்ந்த கும்பல்கள் மூலமாக நீதிபதிகளை கொலை செய்வோம் என்றும் மர்மநபர்கள் மிரட்டல் விடுத்திருந்தார்கள். இதுபற்றி அதிகாரி முரளிதர் சம்பந்தப்பட்ட நீதிபதிகள் மற்றும் கோர்ட்டு பதிவாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

அத்துடன் பெங்களூரு மத்திய மண்டல சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் முரளிதர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாகிஸ்தான் நாட்டில் இருந்து தான் இந்த மிரட்டல் வந்ததா? இங்கிருந்து கொண்டே பாகிஸ்தான் பெயரில் மர்மநபர்கள் மிரட்டல் விடுத்தார்களா? என்பது தெரியவில்லை.

அதிகாரி முரளிதருக்கு வந்த செல்போன் எண் மூலமாக மர்மநபர்கள் பற்றிய தகவல்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். மேலும் மர்மநபர்களையும் போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். ரூ.50 லட்சம் கேட்டு ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதே நேரத்தில் முன் எச்சரிக்கையாக சம்பந்தப்பட்ட 6 நீதிபதிகளுக்கும் உரிய பாதுகாப்பையும் போலீசார் வழங்கி உள்ளனர். அவர்களது வீடுகளில் துப்பாக்கிய ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்