மனைவி, கள்ளக்காதலன் கொலை: கணவர் உள்பட 3 பேருக்கு தூக்கு தண்டனை
|மனைவியையும், அவரது கள்ளக்காதலனையும் கொன்ற வாலிபருக்கும், அவரது கூட்டாளிகளுக்கும் தூக்கு தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
பெங்களூரு
பெலகாவி மாவட்டம் சிக்கோடி தாலுகா கே.கே.மமதாபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி சங்கீதா. இவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த பசவராஜ் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி தெரிந்த பாபு தனது மனைவியை கண்டித்துள்ளார்.
ஆனாலும் அவர் கள்ளத்தொடர்பை கைவிடவில்லை. இதையடுத்து, கடந்த 2013-ம் ஆண்டு தனது மனைவி சங்கீதா, கள்ளக்காதலன் பசவராஜை தனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து பாபு கொலை செய்திருந்தார். இதுதொடர்பாக சிக்கோடி போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபு, நாகப்பா, பீமப்பா ஆகிய 3 பேரையும் கைது செய்திருந்தார்கள்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை சிக்கோடி கோர்ட்டில் நடைபெற்றது. இரட்டை கொலை தொடர்பாக சிக்கோடி போலீசார், கைதான 3 பேர் மீதும் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று சிக்கோடி கோர்ட்டில் நீதிபதி தீர்ப்பு கூறினார். அப்போது சங்கீதா, பசவராஜை கொலை செய்த பாபு, நாகப்பா, பீமப்பா ஆகிய 3 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.