குவைத் மன்னர் மறைவு; பிரதமர் மோடி இரங்கல்
|குவைத் அரச குடும்பம், தலைமையாளர்கள் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு எங்களுடைய ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறோம் என்று தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி,
குவைத்தின் மன்னராக 3 ஆண்டுகளாக அதிகாரத்தில் இருந்தவர் ஷேக் நவாப் அல்-அகமது அல்-ஜாபர் அல்-சபா (வயது 86). கடந்த மாதத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானார். இதனை தொடர்ந்து அந்நாட்டு அரசு தொலைக்காட்சியில் அதுபற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்காக, பிற நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டன.
அவரது மறைவு பற்றிய தகவலை அறிக்கை ஒன்றின் மூலம் குவைத் அரசு தெரிவித்துள்ளது. அதில், குவைத் அரசின் மன்னர் ஷேக் நவாப் அல்-அஹ்மத் அல்-சபாவின் மறைவுக்கு மிகுந்த சோகத்துடனும், துக்கத்துடனும் இரங்கல் தெரிவித்து கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளது.
அவரது சகோதரர் மறைவுக்கு பின் 2020-ல் மன்னராக அவர் பொறுப்பேற்றார். கடந்த மாதம் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அவரது உடல் நலம் முன்னேறியது என கூறப்பட்டது. இந்நிலையில், அவர் இன்று காலமானார்.
அவரது மறைவை அடுத்து பல்வேறு நாட்டு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதுபற்றி பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் செய்தியில், குவைத் மன்னர் ஷேக் நவாப் அல்-அகமது அல்-ஜாபர் அல்-சபாவின் துரதிர்ஷ்டவச மறைவை பற்றி அறிந்ததும், ஆழ்ந்த வருத்தம் ஏற்பட்டது.
குவைத் அரச குடும்பம், தலைமையாளர்கள் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு எங்களுடைய ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறோம் என்று தெரிவித்து உள்ளார்.