நக்சல் தாக்குதலில் மரணம்; வீரரின் சவப்பெட்டியை தோளில் சுமந்து சென்ற சத்தீஷ்கார் முதல்-மந்திரி
|நக்சலைட்டுகள் தாக்குதலில் மரணம் அடைந்த வீரரின் சவப்பெட்டியை சத்தீஷ்கார் முதல்-மந்திரி தனது தோளில் சுமந்து சென்றார்.
ராய்ப்பூர்,
சத்தீஷ்காரில் தன்டேவாடா நகரில் தேடுதல் வேட்டைக்கு சென்றபோது, பதுங்கி இருந்து நக்சலைட்டுகள் நடத்திய சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதலில், மாவட்ட ரிசர்வ் பாதுகாவல் படையை சேர்ந்த 10 வீரர்கள் மற்றும் வாகன ஓட்டுநர் உள்பட 11 பேர் உயிரிழந்தனர்.
இதனை தொடர்ந்து மாநில போலீசார் மற்றும் உயரதிகாரிகள் சம்பவ பகுதிக்கு சென்று உடல்களை மீட்டனர். பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்ததுடன், தாக்குதலுக்கு கடும் கண்டனமும் தெரிவித்தனர்.
கோழைத்தன தாக்குதல் என குறிப்பிட்ட மந்திரி அமித்ஷா, சத்தீஷ்கார் அரசுக்கு வேண்டிய உதவிகள் வழங்கப்படும் என முதல்-மந்திரி பூபேஷ் பாகலிடம் தொலைபேசி வழியே பேசி உறுதி கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தில், உயிரிழந்த வீரரின் இறுதி சடங்கு இன்று நடைபெற்றது. இதில், முதல்-மந்திரி பூபேஷ் பாகல் இன்று நேரில் கலந்து கொண்டார்.
அவர், வீரரின் உயிரிழந்த உடல் இருந்த சவப்பெட்டியை தன்னுடைய தோளில் தூக்கி சென்றார். வீரர்களின் தியாகம் வீண் போகாது என அவர் கூறியுள்ளார்.
நக்சலைட்டுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்த சம்பவத்தினால், எங்களுடைய உணர்ச்சி சார்ந்த மனநிலை பாதிக்கப்படாது என்று கூறினார். தொடர்ந்து நாங்கள் போராடுவோம் என்று அவர் கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தில் 2 நக்சலைட்டுகளை போலீசார் கைது செய்து உள்ளனர் என்றும் அவர்களில் ஒருவர் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் அவர் கூறியுள்ளார்.