< Back
தேசிய செய்திகள்
விடாது துரத்திய மரணம்; தெலுங்கானா பெண் எம்.எல்.ஏ. வாழ்வில் சோகம்
தேசிய செய்திகள்

விடாது துரத்திய மரணம்; தெலுங்கானா பெண் எம்.எல்.ஏ. வாழ்வில் சோகம்

தினத்தந்தி
|
24 Feb 2024 2:09 PM IST

லாஸ்யா, கடந்த ஆண்டு டிசம்பரில் லிப்ட் ஒன்றில் ஏறியபோது, அதிக எடையால் விபத்தில் சிக்கியது.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலத்தில் பாரதீய ராஷ்டிர சமிதி கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் லாஸ்யா நந்திதா (வயது 37). ஐதராபாத் ஓ.ஆர்.ஆர். சாலையில் அவர் சென்று கொண்டிருந்த கார் திடீரென நேற்று காலை சாலை தடுப்பின் மீது மோதி விபத்தில் சிக்கியது. பலத்த காயமடைந்த லாஸ்யா சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டார். அவருடன் சென்ற கார் டிரைவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

எனினும், இது அவர் சந்தித்த முதல் விபத்து அல்ல. இந்த மாதத்திலேயே அவர் இதற்கு முன் மற்றொரு விபத்து ஒன்றை சந்தித்திருக்கிறார். 10 நாட்களுக்கு முன் கடந்த 13-ந்தேதி நர்காட்பள்ளி என்ற இடத்தில் விபத்தில் சிக்கினார்.

தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டியின் பேரணிக்கு சென்றபோது, நல்கொண்டா பகுதியருகே குடிபோதையில் இருந்த நபர் ஓட்டி வந்த வாகனம் அவருடைய வாகனம் மீது மோதியது. இந்த சம்பவத்தில், லாஸ்யாவின் பாதுகாவலர் பலியானார். லாஸ்யாவுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன.

இதன்பின்னர் அவர் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். லாஸ்யாவின் தந்தை மறைவுக்கு பின் அவர் போட்டியிட்ட செகந்திராபாத் கன்டோன்மென்ட் தொகுதியிலேயே போட்டியிட்டு, முதல்முறையாக லாஸ்யா எம்.எல்.ஏ.வானார். அவர், இதற்கு முன் வேறொரு விபத்திலும் சிக்கியுள்ளார்.

எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பரில் பொயின்பள்ளி பகுதியில், நிகழ்ச்சி ஒன்றில் தலைமை விருந்தினராக கலந்து கொள்ள அவர் சென்றார். அப்போது, அவர் லிப்டில் ஏறி இருந்தபோது, அதிக எடையால் அந்த லிப்ட் விபத்தில் சிக்கி 6 அடி தூரம் கீழே சென்றது. இதில், லாஸ்யா மற்றும் லிப்டில் இருந்த பலரும் காயமின்றி மீட்கப்பட்டனர்.

2 மாதங்களில் 3 விபத்துகளை அவர் சந்தித்திருக்கிறார். இவருடைய தந்தை மறைந்த ஸ்வர்கியா சாயண்ணா கடந்த ஆண்டு இதே மாதத்தில் காலமானார். இந்த நிலையில், அவருடைய மகளான லாஸ்யாவும் இதே மாதத்தில் உயிரிழந்து உள்ளார்.

மேலும் செய்திகள்