< Back
தேசிய செய்திகள்
நிழலுலக தாதா தாவூத் இப்ராகிமின் சகோதரர் அரசு மருத்துவமனையில் அனுமதி
தேசிய செய்திகள்

நிழலுலக தாதா தாவூத் இப்ராகிமின் சகோதரர் அரசு மருத்துவமனையில் அனுமதி

தினத்தந்தி
|
21 Aug 2022 2:56 PM IST

நிழலுலக தாதா தாவூத் இப்ராகிமின் சகோதரர் திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலியால் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.






மும்பை,


மராட்டியத்தின் மும்பை நகரில் கடந்த 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் 257 பேர் கொல்லப்பட்டனர். 713 பேர் காயமடைந்தனர். இதில் தொடர்புடைய நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம், இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பின்னர் பாகிஸ்தான் நாட்டுக்கு தப்பியோடி விட்டார்.

அவரை நாடு கடத்தும் பணியில் அரசு ஈடுபட்டு உள்ளது. தேடப்படும் பட்டியலிலும் அவர் வைக்கப்பட்டு உள்ளார். இவரது இளைய சகோதரர் இக்பால் கஸ்கர். பணமோசடி வழக்கு ஒன்றில் கடந்த பிப்ரவரியில் அவரை அமலாக்க துறையினர் கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து, நவிமும்பைக்கு அருகேயுள்ள தலோஜா சிறைச்சாலையில் அவர் அடைக்கப்பட்டார். இந்நிலையில், திடீரென நேற்று அவர் அரசால் நடத்தப்படும் மும்பையிலுள்ள ஜே.ஜே. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதுபற்றி அதிகாரிகள் இன்று கூறும்போது, கஸ்கருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து இதய பாதிப்புகளுக்கான மருத்துவ சிகிச்சை அளிக்கும் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்து உள்ளார்.

கஸ்கர் மீது பல மிரட்டி பணம் பறித்தல் வழக்குகள் உள்ளன. இதனால், அவரை அமலாக்க துறை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர். இதன்பின்பு, கஸ்கர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.



மேலும் செய்திகள்