சந்திரதிரிகோண மலைக்கு வர சுற்றுலா பயணிகளுக்கு தடை
|தத்தா ஜெயந்தியையொட்டி வருகிற 6-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை 5 நாட்களுக்கு சந்திரதிரிகோண மலைக்கு வர சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட கலெக்டர் ரமேஷ் அறிவித்துள்ளார்.
சிக்கமகளூரு:
தத்தா ஜெயந்தியையொட்டி வருகிற 6-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை 5 நாட்களுக்கு சந்திரதிரிகோண மலைக்கு வர சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட கலெக்டர் ரமேஷ் அறிவித்துள்ளார்.
தத்தா ஜெயந்தி விழா
சிக்கமகளூரு மாவட்டம் சந்திரதிரிகோண மலையில் தத்தா குகைக்கோவில் அமைந்துள்ளது. அங்கு தத்தா பாதம் அமைந்திருக்கிறது. ஒவ்வொரு வருடமும் அந்த கோவிலில் தத்தா ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த சமயத்தில் விசுவ இந்து பரிஷத், பஜ்ரங்தள் உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்பினரும், பா.ஜனதாவினரும் மாலை அணிந்து விரதம் இருந்து தத்தா கோவிலுக்கு நடைபயணமாக வந்து தத்தா பாதத்தை தரிசித்து வருகிறார்கள்.
அதுபோல் இந்த ஆண்டும் தத்தா ஜெயந்தி விழா நடைபெறுகிறது. வருகிற 6-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை இந்த விழா நடைபெற உள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தத்தா பாதத்தை தரிசிக்கும் நிகழ்வு வருகிற 8-ந் தேதி அன்று நடக்கிறது.
சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை
இதையொட்டி அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த நிலையில் தத்தா ஜெயந்தியையொட்டி அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க வருகிற 6-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை சந்திரதிரிகோண மலைக்கு சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த 5 நாட்களில் சுற்றுலா பயண்கள் சந்திரதிரிகோண மலை மற்றும் அதை சுற்றியுள்ள முல்லையன்கிரி, ஒன்னமன் அருவி, மாணிக்கதாரா அருவி உள்ளிட்ட எந்தவித சுற்றுலா தலங்களுக்கும் செல்லக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இதுபற்றி மாவட்ட கலெடர் ரமேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
போலீசார் தீவிரமாக...
தத்தா ஜெயந்தி விழாவையொட்டி வருகிற 6-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை சுற்றுலா பயணிகள் சந்திரதிரிகோண மலைக்கு வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் சந்திரதிரிகோண மலையை சுற்றியுள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த 5 நாட்களில் யாரேனும் அப்பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளில் அறைகளை முன்பதிவு செய்திருந்தால், அவர்கள் அங்கு வந்து தங்கி வேறு இடங்களுக்கு சென்று சுற்றிப்பார்க்கலாம். மேலும் இந்த 5 நாட்களில் அங்கு வரும் சுற்றுலா பயணிகளை போலீசார் தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.