முதுநிலை நீட் தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு
|முதுநிலை நீட் தேர்வு ஆகஸ்டு மாதம் 11-ம் தேதி நடைபெறும் என்று தேசிய மருத்துவ கல்வி வாரியம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு, கடந்த மாதம் 23-ந் தேதி நடக்க இருந்தது. ஆனால், அதற்கு முந்தைய நாள் இரவு, அத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக திடீரென அறிவிக்கப்பட்டது. அதாவது 3-வது முறையாக முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையே, முதுநிலை நீட் தேர்வு நடத்துவதற்கான தயார்நிலை குறித்து கடந்த வாரம் மத்திய உள்துறை அமைச்சகமும், சுகாதாரத்துறை அமைச்சகமும் ஆலோசனை நடத்தின. இதையடுத்து, ஆகஸ்டு மாத நடுவில் முதுநிலை நீட் தேர்வு நடக்கக்கூடும் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிலையில், முதுநிலை நீட் தேர்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது, முதுநிலை நீட் தேர்வு ஆகஸ்டு மாதம் 11-ம் தேதி நடைபெறும் என்று தேசிய மருத்துவ கல்வி வாரியம் அறிவித்துள்ளது. முதுநிலை நீட் தேர்வு காலை, மாலை என இரு வேளைகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
www.natboard.edu.in என்ற இனையதளம் மூலமாக தேர்வு குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ளலாம் என்றும் தேசிய மருத்துவ கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.