மந்திரிகள் எச்.சி.மகாதேவப்பா, சிவராஜ் தங்கடகி முன்னிலையில் மைசூரு தசரா விழா இலச்சினை வெளியீடு
|மைசூரு தசரா இலச்சினையை மந்திரிகள் எச்.சி.மகாதேவப்பா, சிவராஜ் தங்கடகி ஆகியோர் ெவளியிட்டனர்.
மைசூரு:
மைசூரு தசரா இலச்சினையை மந்திரிகள் எச்.சி.மகாதேவப்பா, சிவராஜ் தங்கடகி ஆகியோர் ெவளியிட்டனர்.
மைசூரு தசரா விழா
மைசூருவில் ஆண்டுதோறும் தசரா விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தசரா 10 நாட்கள் நடைபெறும் விழாவை காண லட்சக்கணக்கானோர் குவிவார்கள். இ்ந்தநிலையில் இந்த ஆண்டு தசரா விழா வருகிற 15-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. தசரா விழாவுக்கான ஏற்பாடுகள் மைசூருவில் முழுவீச்சில் நடந்து வருகிறது.
நேற்று மைசூரு அரண்மனை நுழைவுவாயில், பாரம்பரிய கட்டிடங்கள், முக்கிய பகுதிகளில் மின்விளக்கு அலங்காரத்திற்காக மின்விளக்குகள் பொருத்தப்பட்டன.
இந்தநிலையில், நேற்று மைசூரு அரண்மனை வளாகத்தில் தசரா விழாவை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்திற்கு மந்திரிகள் எச்.சி.மகாதேவப்பா, சிவராஜ் தங்கடகி ஆகியோர் தலைமை தாங்கினர். இதில், மாவட்ட கலெக்டர் ராஜேந்திர பிரசாத், மாவட்ட பஞ்சாயத்து நிர்வாக செயல் அதிகாரி எம்.காயத்ரி, அரண்மனை மண்டலி இயக்குனர் சுப்பிரமணி, மாநகர போலீஸ் கமிஷனர் ரமேஷ் பாத்தோடு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீமா லட்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிகள்
தசரா விழாவில் என்னென்ன நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். எந்த நாட்களில் என்ன நிகழ்ச்சிகள் நடத்துவது என ஆலோசிக்கப்பட்டது. அப்போது தசரா தொடர்பான கடைசி ஆலோசனை கூட்டம் இது என மந்திரி எச்.சி.மகாதேவப்பா கூறினார். முன்னதாக தசரா இலச்சினையை மந்திரிகள் எச்.சி.மகாதேவப்பா, சிவராஜ் தங்கடகி ஆகியோர் வெளியிட்டனர்.
பின்னர் நிருபர்களிடம் மந்திரி எச்.சி.மகாதேவப்பா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை பொய்த்து போனது. இதனால் மாநிலத்தில் 145 தாலுகாக்களில் வறட்சி ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் தசரா விழாவை ஆடம்பரம் இல்லாமல் பராம்பரியம், கலாசாரம் நிகழ்ச்சிகளுடன் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.
துணை கமிட்டிகள்
பாரம்பரியம், கலாசாரம் நிகழ்ச்சிகளுடன் தசரா கொண்டாடுவது குறித்து அனைத்து அதிகாரிகளுடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினோம். தசரா விழாவிற்கு 18 துணை கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. பிரசாரத்திற்காக தசரா இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
தசரா விழாவை கன்னட இசையமைப்பாளர் ஹம்சலேகா வருகிற 15-ந்தேதி சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் வளாகத்தில் தொடங்கி வைக்கிறார். அதே நாளில் கலா மந்திராவில் கன்னட திரைப்பட விழா, மல்யுத்த போட்டி, மலர்கள் கண்காட்சி, தசரா விழா கண்காட்சி, மின்விளக்கு அலங்காரம், இரவு அரண்மனை வளாகத்தில் கலாசார நிகழ்ச்சி, இசைக்கச்சேரிகள், போன்றவை நடைபெறும்.
ரூ.15 கோடி ஒதுக்கீடு
இந்த ஆண்டு தசரா விழாவை குறைந்த பட்ஜெட்டில் நடத்துவதற்கு முடிவு செய்துள்ளோம். நாட்டுப்பற்று, அரசியலமைப்பு சட்டம், ஜனநாயகம் பற்றி இன்றைய தலைமுறைக்கு தெரியப்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. தசரா செலவிற்காக கன்னட கலாசாரத்துறை சார்பில் ரூ.15 கோடி ஒதுக்கப்பட்டு்ள்ளது. இவ்வாறு மந்திரி கூறினார்.
பீரங்கிக்கு சிறப்பு பூஜை
ஜம்பு சவாரி ஊர்வலத்தில் வாணவேடிக்கை நிகழ்த்தும்போது, பட்டாசு சத்தத்தை கேட்டு மிரளாமல் இருக்க யானைகள் முன்னிலையில் பீரங்கி குண்டை வெடிக்க செய்து பயிற்சி அளிக்கப்படுவது வழக்கம். இந்த பீரங்கி குண்டு பயிற்சி அளிப்பதற்காக நேற்று மைசூரு அரண்மனையில் இருந்த பீரங்கிகள் சுத்தம் செய்யப்பட்டன. பின்னர் அவற்றுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
விரைவில் யானைகளுக்கு பீரங்கி குண்டு வெடிசத்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது.