< Back
தேசிய செய்திகள்
பாட புத்தகங்களில் இருந்து டார்வின் கொள்கை நீக்கம் இல்லை; மத்திய மந்திரி விளக்கம்
தேசிய செய்திகள்

பாட புத்தகங்களில் இருந்து டார்வின் கொள்கை நீக்கம் இல்லை; மத்திய மந்திரி விளக்கம்

தினத்தந்தி
|
21 Jun 2023 4:57 AM GMT

பாட புத்தகங்களில் இருந்து டார்வின் கொள்கை நீக்கம் செய்யப்படவில்லை என மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்து உள்ளார்.

புனே,

மராட்டியத்தின் புனே நகரில் பந்தர்கர் ஓரியண்டல் ஆய்வு மையத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய கல்வி மற்றும் திறன் வளர்ச்சிக்கான மந்திரி தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டார். அவர் பேசும்போது, அறிவியல் பாட புத்தகங்களில் இருந்து டார்வினின் பரிணாம கொள்கையானது, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலால் (என்.சி.இ.ஆர்.டி.) நீக்கப்பட்டு விட்டது என்று சர்ச்சைக்குரிய தகவல் வெளியாகி உள்ளது.

இதேபோன்று, தனிம அட்டவணையும் நீக்கப்பட்டு உள்ளது என சர்ச்சையான தகவல் வெளிவந்து உள்ளது. இதுபோன்ற விசயங்கள் எதுவும் நடைபெறவில்லை என வெளிப்படையாக அறிவிக்க விரும்புகிறேன் என அவர் கூறியுள்ளார். இதுபற்றிய தகவல்களை சேகரிப்பதற்காக என்.சி.இ.ஆர்.டி. கவுன்சிலுக்கு நேரிடையாக சென்றேன்.

இதில் என்.சி.இ.ஆர்.டி. கவுன்சில் அதிகாரிகள் கூறும்போது, கொரோனா பெருந்தொற்று காலத்தில், மீண்டும் மீண்டும் வர கூடிய உள்ளடக்க விசயங்களை தற்காலிக அடிப்படையில் குறைத்து கொள்ளும்படியும், பின்னர் அவற்றை மீண்டும் சேர்த்து கொள்ளலாம் என நிபுணர்கள் அறிவுறுத்தினர்.

அதனால், 8 மற்றும் 9 ஆகிய வகுப்புகளின் பாட புத்தகங்களில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. 10-ம் வகுப்பு பாட புத்தகத்தில் இருந்து, கடந்த ஆண்டு பரிணாம கொள்கை பற்றிய ஒரு பகுதி நீக்கப்பட்டது.

ஆனால், 11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளில் தொடர்ந்து பாட பகுதி நீக்கப்படாமல் நீடித்தது என அவர்கள் தெரிவித்தனர் என மத்திய மந்திரி கூறியுள்ளார். இதேபோன்று, தனிம அட்டவணையானது 9-ம் வகுப்பு மற்றும் 11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளில் கற்பிக்கப்பட்டு வருகின்றன என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.

மேலும் செய்திகள்