< Back
தேசிய செய்திகள்
உறவினர் திருமண விழாவில் நடனம் ஆடியவர் திடீரென சரிந்து விழுந்து மரணம்; அதிர்ச்சி வீடியோ
தேசிய செய்திகள்

உறவினர் திருமண விழாவில் நடனம் ஆடியவர் திடீரென சரிந்து விழுந்து மரணம்; அதிர்ச்சி வீடியோ

தினத்தந்தி
|
15 Nov 2022 11:54 AM IST

ராஜஸ்தானில் உறவினர் திருமண விழாவில் சிரித்து, மகிழ்ந்து நடனம் ஆடிய நபர் திடீரென சரிந்து விழுந்து மரணம் அடைந்த வீடியோ அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.



ஜெய்ப்பூர்,


ராஜஸ்தானின் பாலி மாவட்டத்தில் குடா ராம்சிங் கிராமத்தில் சகோதரி உறவு முறை கொண்ட பெண்ணின் திருமண விழாவில் சலீம் பாய் ராநவாஸ் என்பவர் கலந்து கொண்டார். அவர் மேடையில் மற்றவர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக நடனம் ஆடியபடி இருந்துள்ளார்.

இதனை சுற்றியிருந்தவர்கள் வீடியோ எடுத்து உள்ளனர். இந்த நிலையில், திடீரென அவர் சரிந்து விழுந்துள்ளார். இதனை பார்த்த மற்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அருகேயுள்ள மருத்துவமனைக்கு அவரை தூக்கி சென்றனர். எனினும், அவர் உயிரிழந்து விட்டார் என்று டாக்டர்கள் கூறி விட்டனர்.

இதுபோன்று மகிழ்ச்சியாக நடனம் ஆடும்போது, ஏறக்குறைய 40 வயது தொட்ட நபர்கள் உயிரிழப்பது, கொரோனாவுக்கு பின்னான கடந்த காலங்களில் அதிகரித்து உள்ளது.

மும்பையில் சில மாதங்களுக்கு முன் நவராத்திரி பண்டிகையையொட்டி, கர்பா நடனம் ஆடியபோது மணீஷ் நராப்ஜி சோனிக்ரா என்ற 35 வயது நபர், மாரடைப்பு ஏற்பட்டு சரிந்து விழுந்து உள்ளார். இதனை அறிந்த அவரது தந்தை நராப்ஜி சோனிக்ரா (வயது 66) என்பவரும் மரணம் அடைந்த அதிர்ச்சி சம்பவம் ஏற்பட்டது.

கடந்த செப்டம்பர் மாதம் ஜம்முவில், பெண் கடவுள் பார்வதி வேடமிட்டு யோகேஷ் குப்தா என்ற கலைஞர் மேடையில் ஆடியபோது, நடனத்தின் ஒரு பகுதியாக தரையில் விழுந்து உள்ளார். அவர், பின்பு எழுந்து தொடர்ந்து ஆடியுள்ளார்.

இந்நிலையில், நிகழ்ச்சி நடத்தி கொண்டிருந்தபோதே சரிந்து விழுந்துள்ளார். ஆனால், பல நிமிடங்கள் அவர் எழுந்திருக்கவில்லை. இசை ஒலித்து கொண்டிருந்தது. பார்வையாளர்கள் நிகழ்ச்சியின் ஒரு பகுதி என்று அமைதியாக பார்த்து கொண்டு இருந்துள்ளனர்.

ஆனால், கடவுள் சிவன் வேடமிட்ட மற்றொரு கலைஞர் மேடைக்கு சென்று யோகேஷை பரிசோதித்து உள்ளார். அதன்பின்னர், நிலைமையறிந்து பதறி போய் உதவிக்கு ஆட்களை அழைத்து உள்ளார். எனினும், அவர் உயிரிழந்த சம்பவம் அப்போது அதிர்ச்சி அலை ஏற்படுத்தியது.


மேலும் செய்திகள்