< Back
தேசிய செய்திகள்
பா.ஜ.க. ஆட்சியில் தலித், பிற்படுத்தப்பட்டோருக்கு உரிய மரியாதை கிடைக்கிறது - பிரதமர் மோடி
தேசிய செய்திகள்

பா.ஜ.க. ஆட்சியில் தலித், பிற்படுத்தப்பட்டோருக்கு உரிய மரியாதை கிடைக்கிறது - பிரதமர் மோடி

தினத்தந்தி
|
13 Aug 2023 2:26 AM IST

பா.ஜ.க. ஆட்சியில் தலித், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு உரிய மரியாதை கிடைப்பதாக பிரதமர் மோடி கூறினார்.

அடிக்கல் நாட்டினார்

மத்தியபிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் உள்ள பத்துமா கிராமத்தில் சமூக சீர்திருத்தவாதியும், ஆன்மிக கவிஞருமான சாந்த் ரவிதாசுக்கு ரூ.100 கோடி மதிப்பில் கோவில் மற்றும் நினைவகம் கட்டப்படவுள்ளது. இதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது.

இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். பின்னர் சாந்த் ரவிதாஸ் சிலைக்கு முன் கைகூப்பி வணங்கிய மோடி, சிலைக்கு மலர்களை தூவி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து, அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

இன்று நான் இங்கு சாந்த் ரவிதாஸ் நினைவிடத்திற்கு அடிக்கல் நாட்டினேன். சுமார் ஒன்றரை வருடங்களில் கட்டி முடிக்கப்பட்ட பிறகு மீண்டும் இங்கு வந்து நினைவு சின்னத்தையும் அருங்காட்சியகத்தையும் திறந்து வைக்க சாந்த் ரவிதாஸ் நிச்சயம் ஆசீர்வதிப்பார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

உரிய மரியாதை அளிக்கிறது

அத்துமீறல்கள் மற்றும் அட்டூழியங்களால் குறிக்கப்பட்ட முகலாயர் காலத்தில் பிறந்த சாண்ட் ரவிதாஸ், சமூக தீமைகளுக்கு எதிரான விழிப்புணர்வை உருவாக்கினார்.

பல ஆண்டுகளாக ஆட்சி செய்த அரசுகள் ஏழைகளுக்கு தண்ணீர் வழங்கத் தவறிய நிலையில், தலித் மக்கள், இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பகுதிகள் இப்போது ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குழாய் மூலம் தண்ணீரைப் பெறுகின்றன.

தலித்துகள், இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எங்கள் அரசு உரிய மரியாதை அளிக்கிறது. ஆனால் கடந்த அரசுகள் இவர்களை புறக்கணித்து தேர்தல் நேரத்தில் மட்டுமே கவனித்தன. ஏழைகளின் நலனுக்காகவும், பழங்குடியினருக்கு கல்வி வழங்கவும், குழந்தைகளுக்கு மதிய உணவை வழங்கவும் மத்திய அரசு ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.

ஏழைகளுக்கானஇலவச ரேஷன் திட்டம்

பெண்களுக்கான சுகன்யா சம்ருத்தி யோஜனா, எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான உதவித்தொகை, தலித்துகள் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கான முத்ரா கடன் திட்டம் போன்றவை எங்கள் அரசின் சிறப்பான நடவடிக்கைகள் ஆகும்.

இன்று, எஸ்.சி, எஸ்.டி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சொந்தக் காலில் நிற்கிறார்கள், தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாறுகிறார்கள். முத்ரா யோஜனாவின் பெரும்பாலான பயனாளிகள் எஸ்.சி, எஸ்.டி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் உலகமே ஸ்தம்பித்தது. இந்தியாவில் தலித்துகள், பழங்குடியினர் மற்றும் ஏழைகளின் உயிர்வாழ்வு குறித்த கவலைகள் இருந்தன. இந்தப் பிரிவினர் எப்படி வாழ முடியும் என்ற கவலை இருந்தது.

என்ன நடந்தாலும் என் ஏழை சகோதர சகோதரிகளை வெறும் வயிற்றில் தூங்க விடமாட்டேன் என்று முடிவு செய்தேன். அப்போது கொண்டுவரப்பட்ட ஏழைகளுக்கான இலவச ரேஷன் திட்டம் இன்றும் உலக நாடுகளால் பாராட்டப்பட்டு வருகிறது.

இவ்வாறு மோடி பேசினார்.

மேலும் செய்திகள்