காங்கிரஸ் மற்றும் சாதி கட்சிகளிடம் இருந்து தலித் தலைவர்கள் விலகி இருக்க வேண்டும் - மாயாவதி
|காங்கிரசும் பிற சாதிய கட்சிகளும் ஆரம்பத்தில் இருந்தே இடஒதுக்கீட்டை எதிர்த்து வருவதாக மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார்.
லக்னோ,
வரவிருக்கும் அரியானா சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி நேற்று தலித் தலைவர்களுக்கு காங்கிரஸ் மற்றும் பிற அரசியலமைப்பு எதிர்ப்பு, இடஒதுக்கீடு எதிர்ப்பு மற்றும் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. எதிர்ப்புக் கட்சிகளில் இருந்து விலகி இருக்குமாறு அறிவுறுத்தினார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "நாட்டில் அரசியல் மாற்றங்கள் ஏற்பட துவங்கி உள்ளன. கடினமான நேரத்தில் மட்டுமே தலித்களை காங்கிரஸ் மற்றும் மற்ற சாதிக்கட்சிகள் முதல்-மந்திரியாக வேட்பாளராக அறிவிக்கும். ஆனால், நல்ல நாட்களில் அவர்களை புறக்கணிக்கும். அவர்களுக்கு பதில் சாதிய தலைவர்களை தான் நியமிக்கும். முக்கியமாக அரியானா மாநிலத்தில் இது நடக்கும்.
அவமானப்படுத்தப்பட்ட தலைவர்கள் அனைவரும் அம்பேத்கரிடம் இருந்து பாடம் படிக்க வேண்டும். அவரை முன் மாதிரியாக கொண்டு, அடக்கு முறைக்கு எதிராக பேச அனுமதிக்கப்படாததால் சுயமரியாதையை கருத்தில் கொண்டு நாடாளுமன்ற எம்.பி., பதவியை ராஜினாமா செய்தேன்
காங்கிரஸ் மற்றும் மற்ற சாதிக்கட்சிகள் ஆரம்பம் முதல் இட ஒதுக்கீட்டுக்கு எதிராகவே உள்ளன. அமெரிக்கா சென்றிருந்த ராகுல் காந்தி, இட ஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பேசினார். அரசியல்சாசனம், இட ஒதுக்கீடு மற்றும் தாழ்த்தப்பட்ட மற்றும் ஓ.பி.சி.,க்களுக்கு எதிரான கட்சிகளிடம் இருந்து தள்ளி இருங்கள்" என்று அதில் மாயாவதி தெரிவித்துள்ளார்.