நிலத்தகராறு: சகோதரர்கள் அடித்துக்கொலை - குஜராத்தில் பயங்கரம்
|நிலத்தகராறில் மாற்று சமுகத்தை சேர்ந்த கும்பல் சகோதரர்களை அடித்துக்கொன்றனர்.
காந்திநகர்,
குஜராத் மாநிலம் சுரேந்திநகர் மாவட்டம் சமத்ஹியல் கிராமத்தை சேர்ந்தவர் அலல்ஜி பர்மர் (60). இவரது சகோதரர் மனோஜ் பர்மர் (54). இவர்களுக்கு அதேகிராமத்தில் விளைநிலம் உள்ளது. இந்த விளைநிலத்தை அதேகிராமத்தை சேர்ந்த அமர்பாய் கூச்சர் என்பவரின் குடும்பத்தினரும் உரிமைகோரியுள்ளனர்.
இந்த நிலம் தொடர்பாக 1998ம் ஆண்டு முதல் இரு குடும்பத்தினருகும் இடையே பிரச்சினை நிலவி வந்துள்ளது. ஆனால், இந்த பிரச்சினை நீதிமன்றம் சென்ற நிலையில் அலல்ஜி பர்மரின் குடும்பத்திற்கு தான் நிலம் சொத்தம் என கோர்ட்டு தீர்ப்பளித்தது.
இந்நிலையில், அலல்ஜி பர்மர் தனது சகோதரர் மனோஜ் பர்மர் மற்றும் குடும்பத்தினருடன் கடந்த புதன்கிழமை தனது நிலத்தில் பயிரிட உழவு பணிகளை முடித்துவிட்டு மாலை வீட்டிற்கு திருப்பிக்கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு அந்த அமர்பாய் கூச்சர் மற்றும் அவரது குடும்பத்தினர் அலல்ஜி பர்மர் அவரது சகோதரர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். கூர்மையான ஆயுதங்களை கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த கொடூர தாக்குதலில் அலல்ஜி பர்மர் மற்றும் அவரது சகோதரர் மனோஜ் பர்மர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 3 பெண்கள், டிராக்டர் டிரைவர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை கைது செய்தனர். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் பாதுகாப்பிற்கு உரிமம் பெற்ற துப்பாக்கி வழங்குவதாகவும் போலீசார் உறுதியளித்துள்ளனர்.
உயிரிழந்த சகோதரர்கள் தலித் சமுகத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தாக்குதல் நடத்தியவர்கள் மாற்று சமுகத்தை சேர்ந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த இரட்டை கொலை சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.