8 வயது சிறுவனுக்கு புத்த மதத்தில் உயர் பொறுப்பு - பட்டம் சூட்டிய தலாய்லாமா
|8 வயது சிறுவனுக்கு புத்த மதத்தில் உயர் பொறுப்புக்கான பட்டம் சூட்டி தலாய்லாமா அறிமுகம் செய்தார்.
தர்மசாலா,
தலாய்லாமா புத்தமதத்தின் உச்சபட்ச தலைவராக விளங்குகிறார். மேலும் திபெத் நாட்டு அரசியலிலும் அவருடைய பங்கு முக்கியமானது. அவருக்கு கீழ் புத்தமத விவகாரங்களில் முடிவெடுக்கும் பொறுப்பு பஞ்சன் லாமா, கல்கா ஜெட்சன் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. கடந்த 2012-ம் ஆண்டு 9-வது கல்கா ஜெட்சனாக இருந்தவர் உடல்நலக்கோளாறு காரணமாக இறந்தார். அதன் பின்னர் அந்த பொறுப்பு காலியாக இருந்தது. அதனை நிரப்ப தலாய்லாமா தகுதியானவரை தேடி வந்தார்.
இந்தநிலையில் புத்தமதத்தின் 3-வது பெரிய தலைவராக கருதப்படும் கல்கா ஜெட்சன் பொறுப்பு மங்கோலியா நாட்டை சேர்ந்த 8 வயது சிறுவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான நிகழ்ச்சி தர்மசாலாவில் கோலாகலமாக நடந்தது. இந்த நிகழ்வில் 5 ஆயிரம் புத்த பிட்சுகள் கலந்து கொண்டனர். தலாய்லாமா அந்த சிறுவனுக்கு பட்டம் சூட்டி அறிமுகம் செய்துள்ளார். ஆனால் வளரும் வரை அவரைப்பற்றி தகவல்கள் ரகசியம் காக்கப்படும் என தெரிகிறது.
உலகின் அதிகாரமிக்கவர்களில் ஒருவராக இந்த 8 வயது சிறுவன் கருதப்படுவார்.