புத்த மத தலைவர் தலாய் லாமா 4 ஆண்டுகளுக்குப் பின் இன்று லடாக் பயணம்!
|திபெத்திய ஆன்மீக தலைவர் தலாய் லாமா லடாக் புறப்பட்டார்.
புதுடெல்லி,
புத்த மதத்தின் தலைவராக அறியப்படும் திபெத்திய ஆன்மீக தலைவர் தலாய் லாமா லடாக் புறப்பட்டார். தலாய் லாமா தனது இரண்டு நாள் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இன்று காலை இமாசல பிரதேசத்தின் தர்மசாலாவில் இருந்து புறப்பட்டார். இன்று இரவு ஜம்முவில் தங்கியிருக்கும் அவர் வெள்ளிக்கிழமை லடாக் சென்றடைவார்.
மறுபுறம், அவருடைய இந்த இந்திய பயணம் சீனாவை எரிச்சலடையச் செய்ய வாய்ப்புள்ளது. ஏனெனில், சமீபத்தில் தனது 87வது பிறந்தநாளை கொண்டாடிய தலாய் லாமாவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடியை, சீனா விமர்சித்தது.
சீனாவின் உள்விவகாரங்களில் தலையிட திபெத் தொடர்பான பிரச்சனைகளை இந்தியா பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று கூறி சீனா சமீபத்தில் விமர்சித்தது.
இதற்கு பதிலடி கொடுத்த மத்திய வெளிவிவகார அமைச்சகம், தலாய் லாமாவை இந்தியாவில் விருந்தினராக நடத்துவது இந்திய அரசாங்கத்தின் நிலையான கொள்கை என்று கூறி சீனாவின் விமர்சனத்தை சாடியுள்ளது.
கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தலாய் லாமாவின் முதல் லடாக் பயணம் இதுவாகும். இதற்கு முன், அவர் கடந்த 2018 ஆம் ஆண்டு லடாக் சென்றிருந்தார்.