மகன், மகளுடன் கிணற்றில் குதித்து தொழிலாளி தற்கொலை
|மகன், மகளுடன் கிணற்றில் குதித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்,
பீதர்:
பீதர் தாலுகா தும்மனசூர் கிராமத்தை சேர்ந்தவர் அங்குஷ் (வயது 28). இவருக்கு திருமணமாகி தணு (6) என்ற மகளும், சாய்ராஜ் (5) என்ற மகனும் இருந்தனர். அங்குஷ் கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் கிராமத்தின் புறநகர் பகுதியில் உள்ள கிணற்றுக்கு சென்றார். பின்னர் அவர் தனது 2 பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்ததும் கிராமத்தினர் உடனடியாக தீயணைப்பு மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அந்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட 3 பேரின் உடல்களையும் மீட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. இதுகுறித்து அவரது குடும்பத்தினரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.