< Back
தேசிய செய்திகள்
திருப்பதிக்கு தினமும் ஒருநாள் சுற்றுலா விரைவு தரிசன அனுமதி சீட்டு- தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் தகவல்
தேசிய செய்திகள்

திருப்பதிக்கு தினமும் ஒருநாள் சுற்றுலா விரைவு தரிசன அனுமதி சீட்டு- தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் தகவல்

தினத்தந்தி
|
3 March 2024 1:10 PM IST

அதிக அளவில் பொது மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் சுற்றுலா பயணம் திருப்பதி ஒரு நாள் சுற்றுலாவாகும்

சென்னை,

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சி.சமயமூர்த்தி வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தினால் இயக்கப்பட்டு வரும் சுற்றுலா திட்டங்களில் அதிக அளவில் பொது மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் சுற்றுலா பயணம் திருப்பதி ஒரு நாள் சுற்றுலாவாகும். திருப்பதி சுற்றுலா செல்லும் பஸ், சென்னை வாலாஜா சாலை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைமை அலுவலகமான சுற்றுலா வளாகத்திலிருந்து தினசரி காலை 4.30 மணிக்கு சுற்றுலா பயணிகளை அழைத்து செல்கின்றது.மேலும் கோயம்பேடு, ரோகினி திரையரங்கிற்கு எதிர்புறம் இருந்தும், பூந்தமல்லி ரோடு திருப்பதி ரோடு இணையும் சந்திப்பு, திருவள்ளூர் பகுதியில் மணவாளன் நகர் இந்திரா காந்தி சிலை அருகில் ஆகிய இடங்களிலும் திருப்பதி சுற்றுலா செல்லும் பயணிகளை பேருந்தில் ஏற்றிக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சென்னை மாநகரத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் திருப்பதி செல்ல வாய்ப்பு உருவாக்கப்பட்டு உள்ளது.ஒவ்வொரு பேருந்திலும் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி பணியில் ஈடுபடுவார். வழிகாட்டிகள் திருப்பதி சுற்றுலா பயணிகளுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சுற்றுலா பயணத்திற்கான விளக்கங்களை அளிப்பார். சுற்றுலா பயணிகளுக்கு காலை உணவு திருத்தணி ஓட்டல் தமிழ்நாடு உணவகத்தில் வழங்கப்படுகின்றது.

சுற்றுலா வழிகாட்டி, சுற்றுலா பயணிகள் முடி காணிக்கை விரைவாக செலுத்த உரிய வழிகாட்டுதல்களை வழங்குவார். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு திருப்பதி தேவஸ்தானம் சிறப்பு அனுமதியாக வழங்கிய விரைவு தரிசன அனுமதி சீட்டின் மூலம் சுற்றுலா பயணிகள் தரிசனம் செய்த பின்னர் சுற்றுலா பயணிகள் அனைவருக்கும் நபர் ஒருவருக்கு திருப்பதி லட்டு ஒன்று வழங்கப்படுகின்றது.

கீழ் திருப்பதியில் மதிய உணவும், திருத்தணி தமிழ்நாடு ஓட்டல் உணவகத்தில் இரவு உணவும் வழங்கப்படுகின்றது.

திருப்பதி சுற்றுலா முடிந்து சென்னை வாலாஜா சாலை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் சுற்றுலா பயணிகளை கொண்டு சேர்த்து திருப்பதி சுற்றுலா பயணம் முடிவு பெறுகின்றது.தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பயணத் திட்டங்களுக்கு முன்பதிவு செய்ய தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் www.ttdconline.com இணைதள பக்கத்தில் முன்பதிவு செய்தோ, அல்லது சென்னை வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைமை அலுவலகமான சுற்றுலா வளாகத்திற்கு நேரில் வருகை தந்தோ முன்பதிவு செய்யலாம்.சுற்றுலா குறித்த மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கட்டணமில்லா தொலைபேசி எண் 180042531111 மற்றும் 044-25333333, 044-25333444 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டும், வலைதள முகவரி www.ttdconline.com மூலமாகவும் விவரங்களை பெறலாம்.

என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்