< Back
தேசிய செய்திகள்
ஆந்திரா சென்ற மிக்ஜம் புயல் : எங்கே கரையை கடக்கிறது..?
தேசிய செய்திகள்

ஆந்திரா சென்ற 'மிக்ஜம்' புயல் : எங்கே கரையை கடக்கிறது..?

தினத்தந்தி
|
5 Dec 2023 5:35 AM IST

மிக்ஜம் புயல் காரணமாக இடைவிடாமல் பெய்த மழையினால் சென்னை மாநகர் முழுவதும் ஸ்தம்பித்து போனது.

சென்னை,

வங்கக்கடலில் உருவான மிக்ஜம் புயல், வடதமிழக கடலோரப் பகுதிகள், தெற்கு ஆந்திர பகுதிகளில் நிலைக் கொண்டு, அதன்பின்னர் தெற்கு ஆந்திர பகுதிகளையொட்டி கரையை கடக்கக் கூடும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு சென்னையில் இருந்து 190 கி.மீ. தொலைவில் மிக்ஜம் புயல் நிலைக்கொண்டு இருந்தது.

அப்போது இருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியது. புயலைச் சுற்றி அடர்ந்த மேகக் கூட்டங்கள் அதிகளவுடன் நகர்ந்து வந்ததால், அதனுடைய நகர்வு வேகம் முன்பை விட மிகவும் குறைந்தது. இதனால் முதலில் புயலாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில், தீவிர புயலாக மாறும் என அறிவிக்கப்பட்டது.

மிக்ஜம் புயல் சென்னை மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளை நேற்று முன்தினம் அதிகாலை நெருங்கியது. அந்த நேரத்தில் இருந்து அதிகனமழை வெளுத்து வாங்கத் தொடங்கியது. மிக்ஜம் புயலின் மையப் பகுதி என்று கூறப்படும் கண் பகுதியை சுற்றி இருக்கும், மழை, காற்று மேகங்களும், அதனைத் தொடர்ந்து வந்த மழை மேகங்களும் சென்னை மீது படரத்தொடங்கியது.

சென்னையை ஒட்டிய பகுதிகளில்தான் புயலின் பாதை சற்று வளைந்து சென்றது. இதனால் அந்த நேரத்தில் புயலின் வேகம் மேலும் குறைந்தது. இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரை அதிகனமழை இடைவிடாமல் கொட்டித் தீர்த்தது.

நேற்று முன்தினம் காலை 8.30 மணியில் இருந்து நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில், தமிழ்நாட்டில் 21 இடங்களில் அதி கனமழையும், 59 இடங்களில் மிக கனமழையும், 15 இடங்களில் கன மழையும் பெய்து இருக்கிறது. இதில் அதிகபட்சமாக சென்னை பெருங்குடியில் 29 செ.மீ. மழை பெய்திருந்தது. அதற்கடுத்தபடியாக திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் 28 செ.மீ. மழையும் பதிவாகியது.

நேற்று காலையும் சென்னையில் மழை தொடர்ந்தது. இடைவிடாமல் பெய்த மழையினால் சென்னை மாநகர் முழுவதும் ஸ்தம்பித்து போனது. அதிகனமழை ஒரு பக்கம் இருந்தாலும், தரைக்காற்றின் தாக்கமும் அதிகளவில் இருந்தது.

பின்னர் மாலையில் வளிமண்டலத்தின் கீழடுக்கில் வடமேற்கு திசை காற்று, மேற்கு திசை காற்றாகவும், நடுப்பகுதியில் வடதிசை காற்று, வடமேற்கு திசை காற்றாகவும், மேலடுக்கில் வடகிழக்கு திசை காற்று, வடமேற்கு திசை காற்றாகவும் மாறியது. இதனால் மிக்ஜம் புயல், சென்னை பகுதிகளை கடந்து விலகிச் செல்ல தொடங்கியது.

புயல் விலகிச் சென்றாலும் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து நள்ளிரவு வரை மழை பெய்த வண்ணமே இருந்தது. அதனையடுத்து முதலில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை குறையத் தொடங்கியது. அதன் பின்னர், சென்னையில் நள்ளிரவுக்கு பிறகு ஓரளவுக்கு மழை குறைந்தது.

இந்நிலையில் மிக்ஜம் புயல் இன்று காலை தெற்கு ஆந்திர பகுதியை அடைந்து, காலை 5.30 மணி முதல் 11.30 மணிக்குள் நெல்லூர்-மசூலிப்பட்டினத்துக்கு இடையே தீவிர புயலாக கரையை கடக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் இருந்து படிப்படியாக நகரத் தொடங்கிய மிக்ஜம் புயல், தற்போது நெல்லூர் கடற்கரையை நெருங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி நெல்லூருக்கு 20 கி.மீ. வடக்கு - வட கிழக்கே மிக்ஜம் புயல் மையம் கொண்டுள்ளது.

மேலும் செய்திகள்