மாண்டஸ் புயல் தாக்கம்: கடலோர பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார் புதுவை முதல் அமைச்சர்
|காலை 11 மணியளவில் முதல் அமைச்சர் ரங்கசாமி கடலோர பகுதிகளை பார்வையிட்டார்.
புதுச்சேரி,
வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை மாண்டஸ் புயலாக உருவெடுத்தது. மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது கன மழையுடன் பலத்த காற்றும் வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயலால், கடந்த 2 நாட்களாக புதுவையில் வானிலை முற்றிலுமாக மாறியுள்ளது. குளிர்ந்த காற்றுடன் சாரல் மழையும் பெய்து வருகிறது. பெரியளவில் மழை பெய்யவில்லை. நேற்று இரவில் காற்றின் வேகம் அதிகரித்தது. புயல் எச்சரிக்கையாக 5-ம் எண் கூண்டு ஏற்றப்பட்டது.
புயல் காரணமாக புதுவையில் இன்றும், நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் காலையில் வழக்கமான மக்கள் நடமாட்டம் இல்லை. பள்ளி செல்லும் வாகனங்கள், பெற்றோர்கள் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. இன்று காலை முதல் காற்றின் வேகம் மேலும் அதிகரித்துள்ளது. கடலில் அலைகளின் சீற்றம் அதிகளவு இருந்தது. அலைகள் சுமார் 10 அடி உயரத்திற்கு எழும்பி கரையில் மோதின.
இந்த நிலையில் காலை 11 மணியளவில் முதல் அமைச்சர் ரங்கசாமி கடலோர பகுதிகளை பார்வையிட்டார். அவர் கடற்கரை சாலைக்கு வந்தார். காரில் இருந்தபடியே கடலின் சீற்றத்தை பார்த்தார். பின்னர் பழைய துறைமுகத்துக்கு வந்து இடிந்து நின்ற பாலத்தை பார்வையிட்டார். அங்கிருந்த போலீசாரிடம், கடல் மணல்பரப்பில் மக்கள் இறங்காமல் தடுக்க உத்தரவிட்டார்.
தொடர்ந்து போலீசார் பைக் மூலம் கடற்கரை சாலையில் மக்கள் வெளியேறும்படி எச்சரிக்கை விடுத்து அப்புறப்படுத்தினர். புதுவையில் குறைந்த அளவிலான கடைகள் மட்டுமே திறக்கப்பட்டிருந்தது. புயல் எச்சரிக்கையால் பெரும்பாலான மக்கள் வீடுகளிலேயே முடங்கினர்.