குஜராத்தில் 15-ந் தேதி கரையை கடக்கும் 'பிபர்ஜாய்' புயல்; பிரதமர் மோடி ஆலோசனை
|குஜராத் கடலோரத்தில் 15-ந் தேதி ‘பிபர்ஜாய்’ புயல் கரையை கடக்கிறது. இதுதொடர்பாக உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
ஆமதாபாத்,
அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை, 'பிபர்ஜாய்' என்ற தீவிர புயலாக உருவெடுத்துள்ளது.
நேற்று குஜராத் மாநிலம் போர்பந்தருக்கு 320 கி.மீ. தென்மேற்கில் புயல் மையம் கொண்டிருந்தது. தொடர்ந்து, மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. 14-ந் தேதிவரை தொடர்ந்து வடக்கு நோக்கி நகரும் என்று தெரிகிறது.
அதன்பிறகு, 15-ந் தேதி பிற்பகலில் குஜராத் மாநிலம் ஜகாவு துறைமுகம் அருகே புயல் கரையை கடக்கிறது. அப்போது, மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும். கடல் அலைகள் 2 முதல் 3 மீட்டர் உயரத்துக்கு எழும்பக்கூடும்.
ஆரஞ்சு எச்சரிக்கை
கட்ச், போர்பந்தர், தேவ்பூமி துவாரகா, ஜாம்நகர், ஜுனாகத், மோர்பி ஆகிய கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று தெரிகிறது.
புயல் வருகையையொட்டி, வானிலை ஆராய்ச்சி மையம், 'ஆரஞ்சு' எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய அரபிக்கடலில் 15-ந் தேதிவரை மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. குஜராத் துறைமுகங்களில் 4-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
ராணுவம்
மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்காக தேசிய பேரிடர் மீட்புப்படை, மாநில பேரிடர் மீட்புப்படை வீரர்கள் தயார்நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர். ராணுவம், கடற்படை, கடலோர காவல்படை ஆகியவற்றுடன் அதிகாரிகள் தொடர்பில் உள்ளனர்.
கடலோர பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை 7 ஆயிரத்து 500 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர். இன்று, சவுராஷ்டிரா-கட்ச் பிராந்தியங்களில் கடலோரத்தில் இருந்து 10 கி.மீ. தூரத்துக்குள் வசிக்கும் அனைவரையும் இடமாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
பிரதமர் ஆலோசனை
இந்நிலையில், 'பிபர்ஜாய்' புயல் தொடர்பான முன்னேற்பாட்டு பணிகள் குறித்து பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.
அதில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மந்திரிசபை செயலாளர் ராஜீவ் கவுபா, இந்திய வானிலை ஆராய்ச்சி துறை தலைமை இயக்குனர் மிருத்யுஞ்சய் மொகாபத்ரா, தேசிய பேரிடர் மீட்புப்படை தலைவர் அதுல் கர்வால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், எந்த பகுதியில் புயல் கரையை கடக்கிறது. அங்கு செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மக்களை அப்புறப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு குஜராத் மாநில அரசை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.