< Back
தேசிய செய்திகள்
125 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று, மழையுடன் குஜராத் கடற்கரையை கடக்கும் பிபோர்ஜாய் புயல்..!
தேசிய செய்திகள்

125 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று, மழையுடன் குஜராத் கடற்கரையை கடக்கும் பிபோர்ஜாய் புயல்..!

தினத்தந்தி
|
15 Jun 2023 10:56 PM IST

புயல் கரை கடக்கத் தொடங்கியதை அடுத்து பலத்த காற்றுடன், கனமழை பெய்து வருகிறது.

அகமதாபாத்,

அரபிக் கடலில் உருவான பிபோர்ஜோய் புயல் அதிதீவிர புயலாக மாறி குஜராத் மாநில கடற்கரை மாவட்டமான கட்ச்- பாகிஸ்தானின் கராச்சி கடற்கரை இடையே கரையை கடந்துவருகிறது. இது "மிகவும் தீவிரமான சூறாவளி புயல்" என வகைப்படுத்தப்பட்டுள்ளது,

கரைகடக்கும் நிகழ்வு நள்ளிரவு வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் காரணமாக குஜராத் கடற்கரையை ஒட்டியுள்ள துவாரகா, ஓகா, நலியா, பூஜ், போர்பந்தர் மற்றும் காண்ட்லா ஆகிய பகுதிகளில் இன்று காலை முதலே கனமழை பெய்து வருகிறது. கடலோரப் பகுதியில் தற்போது பலத்த காற்று வீசி வருகிறது.

புயல் கரை கடக்கத் தொடங்கியதையடுத்து பலத்த காற்றுடன், கனமழை பெய்து வருகிறது. கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. பல்வேறு இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. மின்கம்பங்களும் சாய்ந்துள்ளன. கூரை வீடுகளின் மேற்கூரைகள் பெயர்ந்து காற்றில் பறந்தன. தேவபூமி துவாரகா மாவட்டத்தில் மரம் விழுந்ததில் 3 பேர் காயமடைந்துள்ளனர்.

சாலையில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ராணுவத்தினர் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அடுத்த ஐந்து நாட்கள் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

புயல் நள்ளிரவில் முழு உச்சத்தில் கரையை கடக்கும்போது மணிக்கு 125 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்