அச்சுறுத்தும் பிபோர்ஜாய்' புயல்: குஜராத்தின் கடலோரப் பகுதிகளில் இருந்து 30 ஆயிரம் பேர் வெளியேற்றம்
|புயலை சமாளிக்க குஜராத் அரசு சார்பில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அகமதாபாத்,
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி பிபோர்ஜாய் புயலாக உருவெடுத்துள்ளது. இது அதிதீவிர புயலாக வலுப்பெற்று ஜூன் 15ஆம் தேதி நண்பகல் குஜராத்தின் மான்ட்வி-பாகிஸ்தானின் கராச்சி இடையே சவுராஷ்டிரா, கட்ச் பகுதியில் கரையைக் கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து குஜராத்தில் அரசு சார்பில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், புயல் காரணமாக குஜராத்தின் கடலோர பகுதிகளில் இருந்து சுமார் 30 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.
ஜூன் 15 மாலை மணிக்கு 150 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்றும், கட்ச்சில் உள்ள மாண்ட்வி மற்றும் பாகிஸ்தானின் கராச்சி இடையே ஜக்காவ் துறைமுகத்திற்கு அருகில் புயல் கரையை கடக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சவுராஷ்டிரா-கட்ச் பிராந்தியத்தின் கடலோரப் பகுதிகளில், குறிப்பாக கட்ச், போர்பந்தர் மற்றும் தேவபூமி துவாரகா மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய மிகக் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேவபூமி துவாரகா, ராஜ்கோட், ஜாம்நகர், ஜூனாகத், போர்பந்தர், கிர் சோம்நாத், மோர்பி மற்றும் வல்சாத் ஆகிய மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 17 குழுக்களும், மாநில பேரிடர் மீட்புப் படையின் 12 குழுக்களும் தயார் நிலையில் இருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.