'பிபர்ஜாய்' புயலால் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன குஜராத்தில் 1,000 கிராமங்கள் இருளில் மூழ்கின மீட்பு பணிகள் தீவிரம்
|குஜராத்தில் பிபர்ஜாய் புயல் தாக்கியதில் ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் சரிந்தன. இதனால் 1000-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கின.
ஆமதாபாத்,
அரபிக்கடலில் இந்த மாத தொடக்கத்தில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக வலுவடைந்தது. நாட்கள் செல்லச்செல்ல அது அதிதீவிர புயலாக வலுப்பெற்று மிரட்டியது.
10 நாட்களுக்கு மேலாக அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த இந்த புயல், அதிதீவிர சூறாவளியாக நேற்று முன்தினம் கரையை கடந்தது. குஜராத்தின் கட்ச் பகுதியில் ஜகாவு துறைமுகம் அருகே மாலை 6.30 மணி முதல் கரையை கடந்தது.
நேற்று அதிகாலை 2.30 மணி வரை நீடித்த இந்த கரை கடக்கும் நிகழ்வால் குஜராத்தின் கட்ச் மற்றும் சவுராஷ்டிரா பகுதிகள் பெரும் சேதத்தை சந்தித்தன. புயல் கரையை கடந்தபோது 140 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதால் ஏராளமான குடிசைகள் அடித்துச்செல்லப்பட்டன.
சுமார் 600 மரங்கள் வேருடன் சய்ந்தன. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன. காற்றில் அடித்துச் செல்லப்பட்டும், மரங்கள் விழுந்தும் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன.
கட்ச் கடற்பகுதியில் பல அடி உயரத்துக்கு அலைகள் எழும்பியதால் கடல் நீர் ஊருக்குள் புகுந்தது. இதனால் தாழ்வான பகுதிகள் அனைத்திலும் கடல்நீர் சூழ்ந்தது.
புயல் கரையை கடந்தபோது கட்ச் மற்றும் சவுராஷ்டிரா பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இதுவும் பல இடங்களில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியது.
கட்ச், சவுராஷ்டிரா பகுதிகளை பல மணி நேரம் சூறையாடிய இந்த பிபர்ஜாய் புயலால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. எனினும் மரங்கள் சரிந்தது மற்றும் வீடுகள் இடிந்தது உள்ளிட்ட சம்பவங்களில் 23 பேர் காயமடைந்தனர்.
முன்னதாக 1 லட்சத்துக்கு அதிகமானோர் முகாம்களுக்கு வெளியேற்றப்பட்டு இருந்ததால், உயிரிழப்பை தடுக்க முடிந்ததாக மாநில நிவாரண கமிஷனர் அலோக் குமார் பாண்டே நிம்மதி வெளியிட்டார்.
இது தொடர்பாக காந்திநகரில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
பிபர்ஜாய் புயலுக்கு உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை. இது மாநிலத்தின் மிகப்பெரிய சாதனை ஆகும். எங்களது ஒருங்கிணைந்த முயற்சிகளால் இது சாத்தியமானது.
அதேநேரம் மாநில மின்சாரத்துறைக்கு மிகப்பெரும் நிதியிழப்பை புயல் ஏற்படுத்தி விட்டது. 5,120 மின்கம்பங்கள் புயலால் சரிந்தன. இதனால் சுமார் 4,600 கிராமங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
எனினும் மீட்புக்குழுவினரின் தீவிர முயற்சியால் 3,580 கிராமங்களுக்கு மீண்டும் மின் இணைப்பு கொடுக்கப்பட்டு விட்டன. இன்னும் சுமார் 1,000 கிராமங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது.
அங்கும் மின் இணைப்பை சரி செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. ஆனால் இந்த பணிகளுக்கு மோசமான வானிலை மிகப்பெரும் சவாலாக மாறியிருக்கிறது. மரங்கள் வேருடன் சரிந்ததால் 3 நெடுஞ்சாலைகள் மூடப்பட்டு உள்ளன.
சுமார் 100 வீடுகள் முற்றிலும் சேதமடைந்து விட்டன. 474 குடிசை வீடுகள் பாதியளவு சேதமடைந்திருக்கின்றன. இந்த வீடுகளுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கையை மாநில அரசு விரைவில் தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புயல் பாதித்த பகுதிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் மற்றும் மாநில போலீசார் என பெரும் படையே நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சாலையில் வேருடன் சாய்ந்த மரங்களை அகற்றி போக்குவரத்தை சீர்படுத்துதல், மின் இணைப்பை சரிசெய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே குஜராத்தை பதம்பார்த்த பிபர்ஜாய் புயல், அதிதீவிர புயல் என்ற நிலையில் இருந்து தீவிர புயலாக வலுவிழந்து விட்டது. இது தீவிர காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறும் என தேசிய பேரிடர் மீட்புப்படை இயக்குனர் தெரிவித்தார்.
வலுவிழந்த இந்த புயல் தற்போது தெற்கு ராஜஸ்தானை நோக்கி செல்வதாகவும் அவர் கூறினார்.
புயலின் தாக்கத்தால் ராஜஸ்தானின் ஜலோர், பார்மர் மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. நேற்று முன்தினம் இரவு முதல் இந்த மாவட்டங்களில் சில இடங்களில் சுமார் 70 மி.மீ. வரை மழை பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்த மாவட்டங்களில் 200 மி.மீ. மழை வரை பெய்யும் என எதிர்பார்ப்பதால், இந்த மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டு உள்ளது. இதைப்போல மாநிலத்தின் பல பகுதிகளில் மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது.
புயலுக்கு பிந்தைய சூழலை எதிர்கொள்வதற்காக மராட்டியம், கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் தேசிய பேரிடர் மீட்புப்படை தயாராக வைக்கப்பட்டு உள்ளது.
பிபர்ஜாய் புயல் கரையை கடந்ததும் வலுவிழந்து விட்டதால் பாகிஸ்தான் தப்பி விட்டது. இந்த அதிதீவிர புயலை எதிர்கொள்வதற்காக அங்கும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தன.
குறிப்பாக சிந்து மாகாணத்தில் 67 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டு இருந்தனர். தற்போது புயல் வலுவிழந்து விட்டதால் மாகாண அரசும், அதிகாரிகளும் நிம்மதி அடைந்துள்ளனர்.