சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறதா?; பொதுமக்கள், அதிகாரிகள் கருத்து
|சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருகிறதா என்பது குறித்து பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.
பெங்களூரு:
பலருடைய செல்போன்களிலும் அடிக்கடி கேட்கும் உரையாடல் இதுதான்.
'பேங்க் மேனேஜர் பேசுறேன் சார், உங்கள் ஏ.டி.எம். கார்டை, ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும், ஏன் இணைக்காமல் இருக்கிறீங்க?, ஏ.டி.எம். கார்டை ரினிவல் பண்ணணும் சார். ஏ.டி.எம். கார்டை கையில் எடுங்கள். என்ன பேங்க் கார்டு வைக்கிறீங்க, ஸ்டேட் பேங்கா, இந்தியன் பேங்கா, கனரா பேங்கா?. என்பார்கள்.
சந்தேகமடைந்த நபர் நீங்கள் எந்த பேங்க் மேனேஜர் சார் பேசுறீங்க? ...ஸ்டேட் பேங்கில் இருந்து பேசுகிறேன், உங்கள் ஏ.டி.எம். கார்டை ரினிவல் பண்ணணும், கார்டு மேலே உள்ள 16 நம்பரை மெதுவா சொல்லுங்க சார்' என்பார்.
இணைய மோசடி
வடமாநிலங்களை சேர்ந்த சிலர் கர்நாடகத்தில் உள்ள செல்போன் எண்களில் இதுபோன்று பேசி பணத்தை திருடி விடுகின்றனர். இணையதளம் மூலம் மோசடி பேர் வழிகள் வாடிக்கையாளர்களின் விவரங்களை பெற்று, அவர்களுடன் தொடர்பு கொள்கிறார்கள். ஏதாவது ஆசை வார்த்தைகளை பேசி, செல்போனின் உள்ளே புகுந்துவிட்டால், அதை வைத்து வங்கிக்கணக்கின் உள்ளே போய் பணத்தை அள்ளிவிடுகிறார்கள்.
இதுபோன்று பல வடிவங்களில் சைபர் கிரைம் குற்றங்கள் கொரோனா காலத்தில் அதிகரித்து காணப்பட்டது. தற்போதும் இக்குற்றங்கள் நாடெங்கிலும் அதிகரித்தே காணப்படுகிறது. கர்நாடக இந்த குற்ற அளவுகளில் தற்போது 2-வது இடத்தில் உள்ளது.
கொரோனா பொது முடக்கக் காலமான 2020-ம் ஆண்டு நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில், 11 ஆயிரத்து 97 சைபர் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது கிரிப்டோ மோசடியும் நடக்க ஆரம்பித்திருக்கிறது. இப்படியாக இணையவழி மோசடிகள் ஏராளமாக நடக்கின்றன. மக்களும் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகிறார்கள்.
இதுபற்றி பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அதற்கு அவர்கள் கூறிய விவரம் வருமாறு:-
எளிதில் நம்பி விடுகிறார்கள்
இதுகுறித்து பெங்களூரு சில்க் போர்டு பகுதியை சேர்ந்த கார் டிரைவரான சக்திவேல் கூறுகையில், தற்போது செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. செல்போனில் வரும் அனைத்து தகவல்களையும் மக்கள் எளிதில் நம்பி விடுகிறார்கள். சமூக வலைதளங்களிலேயே மக்கள் மூழ்கி கிடக்கிறார்கள். இதனையே சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் மோசடிக்காரர்கள், வங்கியில் இருந்து பேசுவதாகவும், பரிசு பொருட்கள் தருவதாகவும், வேலை வாங்கி கொடுப்பதாகவும் கூறி பணம் பெற்றும், பொதுமக்களின் வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை எடுத்தும் மோசடி செய்து விடுகிறார்கள்.
பெங்களூரு போன்ற நகரங்களில் விதவிதமான சைபர் கிரைம் குற்றங்கள் நடக்கிறது. இதுபற்றி போலீஸ் தரப்பில் இருந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் மக்கள் மோசடிக்காரர்களிடம் ஏமாந்து விடுகிறார்கள். செல்போன்கள் பயன்பாடு அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில் மக்கள் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். செல்போனில் தொடர்பு கொண்டு பேசுபவர்களை நம்பக்கூடாது. அதுபற்றி குடும்பத்தினரிடம் கலந்து பேசுவதன் மூலம் பணத்தை இழப்பதில் இருந்து தப்பிக்கலாம், என்றார்.
நேரிடையாக சென்று விசாரிக்கலாம்
இதுகுறித்து பெங்களூரு யஷ்வந்தபுரத்தை சேர்ந்த ரவி கூறும் போது, பெங்களூரு போன்ற நகரங்களில் தற்போது இந்த சைபர் குற்றங்கள் அதிகரித்து விட்டது. சாதாரண மக்களில் இருந்து அரசு அதிகாரிகள் வரை மோசடியில் சிக்கி தான் வருகின்றனர். படிக்காதவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்று கூற முடியாது. பணம் சம்பாதிக்கும் ஆசையில் செல்வந்தர்கள் சிலரும் மோசடிக்கு உள்ளாகி விடுகின்றனர். வங்கியில் இருந்து பேசுவதாக கூறினால், உடனே நம்பாமல் மறுநாள் பேசுவதாக கூறலாம். இல்லையெனில் சம்பந்தப்பட்ட வங்கிக்கு நேரிடையாக சென்று மக்கள் விசாரிக்கலாம். இவ்வாறு முன் எச்சரிக்கையாக நடந்து கொண்டால் மோசடி கும்பலிடம் இருந்து தப்பிக்கலாம். கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தாலும் பணத்தை இழப்பது உறுதி, என்றார்.
கவனமாக இருக்க வேண்டும்
மங்களூருவில் நிதி நிறுவனம் நடத்தி வரும் குமரேசன் கூறுகையில், வங்கியில் இருந்து பேசுகிறேன். உங்கள் ஏ.டி.எம். கார்டு காலாவதி ஆகிவிட்டது என்று கூறி ஏதாவது போன் அழைப்பு வந்தால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நான் வங்கிக்கு நேரில் வந்து பேசுகிறேன் என்று கூற வேண்டும். அவ்வாறு இல்லாமல் போனில் பேசிய நபர் கேட்கும் தகவல்களை கொடுத்தால், அவர் நமது வங்கி கணக்கில் உள்ள பணத்தை நொடிப்பொழுதில் அபேஸ் செய்து விடுவார். எனவே பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
அதுபோல் ஏதாவது செயலி லிங்கை செல்போனுக்கு அனுப்பியும் மர்மநபர்கள் பணத்தை பறித்து சைபர் குற்றங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். பலரும் பரிசுப்பொருட்கள் தருவதாக வரும் அழைப்புகள், கடன் தருகிறோம், குறைந்த விலையில் பொருட்கள் தருவதாகவும் கூறி சைபர் குற்றங்களை அரங்கேற்றி வருகிறார்கள். எனவே இதுபோன்ற சைபர் குற்றங்களை தடுப்பது நமது கையில் தான் உள்ளது. யார்ரும் வங்கி எண், ஏ.டி.எம். கார்டு எண், ஓ.டி.பி. எண்களை கேட்டாலோ கொடுக்க கூடாது. இவ்வாறு செய்தால் பாதி சைபர் குற்றங்கள் குறையும் என்றார்.
ஆபாச படங்களை அனுப்பி பணம் பறிக்கும் கும்பல்
மைசூரு டவுன் விஜயநகர பகுதியை சேர்ந்த குடும்பத் தலைவி ஹரினா கூறுகையில், இன்றைய நவீன உலகில் அனைவரின் வங்கி கணக்குகள், இமெயில் பற்றிய தகவல்கள், தனிப்பட்ட தகவல்களையும் செல்போன்களிலேயே வைத்துள்ளனர். இதனால் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. தொழில்நுட்பத்தால் நமக்கு எவ்வளவு நன்மை இருக்கிறதோ அதே அளவுக்கு தீமைகளும் உள்ளன. எனவே பொதுமக்கள் தங்களது செல்போனுக்கு புதியதாக வரும் அழைப்புகளில் இருந்து பேசும் நபருக்கு வங்கி தொடர்பான தகவல்களையோ, செல்போனுக்கு வரும் ஓ.டி.பி. எண்களையோ கூற கூடாது. அதுபோல் செல்போன்களுக்கு வரும் லிங்குகளை நாம் யோசிக்காமல் கிளிக் செய்ய கூடாது. மேலும் பரிசு பொருட்கள் விழுந்து இருப்பதாக கூறி வரும் அழைப்புகளுக்கு நாம் பதில் அளிக்க கூடாது. இதை தடுக்க அரசும், போலீசாரும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இருப்பினும் மக்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே இதுபோன்ற சைபர் குற்றங்களை தடுக்க முடியும் என்றார்.
மைசூரு டவுன் கணேஷ் நகர் பகுதியை சேர்ந்த கோழி இறைச்சி கடை வியாபாரி ஜாபீர் பாஷா கூறுகையில், சைபர் குற்றங்களில் ஈடுபடும் மோசடி ஆசாமிகள், நாளுக்கு நாள் புதுப்புது வடிவில் மக்களை ஏமாற்றி வருகிறார்கள். முதியவர்களையும், போதிய படிப்பறிவு இல்லாத மக்களையும் வங்கி அதிகாரிகள் எனக் கூறியும், பரிசுப்பொருள் விழுந்து இருப்பதாகவும் கூறி அவர்களை நம்ப வைத்து வங்கி எண்கள், பண பரிமாற்றம் செய்ய செயலிகளின் யு.பி.ஐ. எண்களை வாங்கி மோசடி செய்கிறார்கள். தற்போது வாலிபர்கள், தொழில்அதிபர்களின் செல்போன் எண்களுக்கு ஆபாச படங்களை அனுப்பிவிட்டு, அவர்களின் ஆசையை தூண்டுவதுடன், அவர்கள் கொடுக்கும் லிங்கை கிளிக் செய்ய கூறியும் பணத்தை மோசடி செய்யும் பேர்வழிகளும் அதிகரித்து வருகிறார்கள். சைபர் கிரைம் குற்றங்கள் குறைய வாய்ப்பு இல்லை. ஏனெனில் தற்போது மனிதனின் அனைத்து அத்தியாவசிய மற்றும் அன்றாட வேலைகளும் தொழில்நுட்ப உதவியுடன் தான் நடைபெறுகிறது. இதை தடுக்க போலீசார் ஒருபுறம் நடவடிக்கை எடுத்தாலும், மக்கள் விழிப்புணர்வுடன் இருப்பதே முக்கியம். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றார்.
ஏழையும்... பணக்காரர்களும்...
சிவமொக்கா டவுனில் கோபாலா பகுதியில் வசிக்கும் குடும்பத் தலைவி சுனிதா மஞ்சுநாத் கூறும் போது, சைபர் குற்றங்கள் நாட்டில் அதிகரித்து விட்டது. பொய்யான மொபைல் தகவல்களை கேட்டு அறிந்து நமது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பது, நமக்கு பரிசு விழுந்து உள்ளதாக பொய்யான தகவல்களை குறுஞ்செய்தியாக அனுப்பி பின்னர் நமது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்து மோசடி செய்வது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என்று ஏதுமில்லை, பாரபட்சம் இல்லாமல் ஏமாந்து போனவர்கள் ஏராளம். ஏழையும் உண்டு, பணக்காரர்களும் உண்டு! நமக்கு வரும் எந்த ஒரு குறுந்த தகவலுக்கும், தெரியாத எண்ணில் இருந்து வரும் செல்போன் அழைப்புகளுக்கும் நாம் பதில் அளிக்கக் கூடாது. அதுபோல் தற்போது அனைவரின் வங்கி கணக்கு விவரம், பண பரிமாற்ற செயலிகள் பற்றி தகவல்கள் அனைத்தும் செல்போனிலேயே இருக்கிறது. இதை மனதில் வைத்து பரிசு விழுந்திருப்பதாகவோ அல்லது ஆசை வார்த்தை கூறி வரும் அழைப்புகளை நாம் தவிர்க்க வேண்டும். நாம் விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே இதை தடுக்க முடியும் என்றார்.
குற்றவாளிகளை கண்டுபிடிப்பது கஷ்டம்
சிக்கமகளூரு போலீஸ் குற்றப்பிரிவு உதவி சப்- இன்ஸ்பெக்டர் திவாகர் கூறுகையில், எத்தனையோ மோசடிகள் சைபர் குற்றங்களில் நடந்து வருகிறது. இதற்கு பொதுமக்களின் பேராசையே காரணம். உதாரணத்திற்கு ஒருமுறை உங்களுடைய செல்போனுக்கு பரிசு விழுந்து விட்டதாக கூறியவுடன் ஒரு கார் மோட்டார் சைக்கிள் ஆகியவை பரிசாக விழுந்திருப்பதாக கூறி, அதற்கு வரி கட்ட வேண்டும் என முன்பணமாக செலுத்த சொல்வார்கள். அதை யாரும் நம்ப கூடாது. அதை நம்பி மோசடி பேர்வழிகள் கூறியபடி செயல்பட்டால், நமது பணத்தை பறித்துவிடுவார்கள்.
இது போன்ற குற்றங்கள் புகார் அளிக்கப்படும் பட்சத்தில் கண்டிப்பாக நூற்றுக்கு 2 சதவீதம் அல்லது 5 சதவீதங்கள் மட்டும்தான் கண்டுபிடிக்கப்படுகிறது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் வெளி மாநிலத்திலேயோ அல்லது வெளிநாடுகளிலேேயா இருந்து கொண்டு தகவல் தொழில்நுட்ப தரவுகளை திருடி கைவரிசை காட்டுகிறார்கள். ஆகையால் இந்த விஷயத்தில் பொதுமக்களும் பேராசைப்படுபவர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தான் சம்பாதிப்பதை வைத்து சந்தோஷப்பட்டால் போதும் என்று நினைத்தாலே இதுபோன்ற மோசடிகள் நடைபெறாது என்றார்.
சைபர் கிரைம் உதவி எண்
இதுகுறித்து அதிகாரிகள் கூறும் போது, 'சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர் யாரும் அது குறித்து புகார் தெரிவிக்க அச்சப்பட தேவையில்லை. ஒருவர் வங்கி கணக்கில் இருந்து பணம் மோசடி செய்யப்பட்டிருந்தால் உடனே 'தேசிய சைபர் கிரைம் உதவி எண் '155260' புகார் தெரிவிக்கலாம். அதுவும் 24 மணி நேரத்துக்குள் புகார் அளித்தால், மோசடி நபரின் வங்கிக் கணக்குக்குச் செலுத்தப்பட்ட பணத்தை அவர்கள் எடுக்காதவாறு முடக்கலாம். இக்குற்றங்கள் சம்பந்தமாக காவல் நிலையத்துக்கு www.cybercrime.gov.in என்ற வலைத்தளத்திலும் புகார் அளிக்கலாம். பொதுவாக, விபத்து நடந்தவுடன் எவ்வளவு சீக்கிரமாகப் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று உயிரைக் காப்பாற்றுகிறோமோ, அதேபோல், சைபர் குற்றம் நடந்த 48 மணி நேரத்துக்குள் தகவல் கொடுத்தால், துரிதமாக நடவடிக்கை எடுக்க முடியும்.
150 வழக்கு 23 பேர் கைது
பெங்களூரு சைபர் கிரைம் பிரிவு உயர் அதிகாரிகள் கூறும் போது, 'மாநிலம் முழுவதும் தற்போது சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்கும் வகையில் மாநிலம் அளவில் சைபர் கிரைம் பிரிவு செயல்படுகிறது. தற்போது 38 வகையான சைபர் குற்றங்கள் நடக்கின்றன. இதனை தடுக்கவும், குற்றவாளிகளை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்திய அளவில் சைபர் குற்றங்கள் நடைபெறும் மாநிலங்களில் கர்நாடகம் 3-வது இடத்தில் உள்ளது.
கர்நாடகத்தில் ஒட்டுமொத்தமாக கடந்த 2022-ம் ஆண்டு ரூ.366 கோடி மதிப்பிலான சைபர் குற்றங்கள் நடந்துள்ளது. அதன்படி பார்த்தால் நாள் ஒன்றுக்கு சைபர் மோசடியால் ரூ.1 கோடியை மக்கள் இழந்து வருகிறார்கள். நடப்பாண்டு இதுவரை 1,325 வழக்குகள் பதிவாகி உள்ளது. இதில் கர்நாடகத்தில் சைபர் குற்றங்கள் அதிகளவில் நடைபெறும் நகரங்களில் பெங்களூரு முதலிடத்திலும், மைசூரு 2-வது இடத்திலும் உள்ளது. பெங்களூருவில் கடந்த 2022-ம் ஆண்டு மட்டும் ரூ.266 கோடி அளவில் சைபர் மோசடிகள் நடந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் 1930 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். தற்போது சைபர் குற்றங்களால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக விழிப்புணர்வு வீடியோக்களும் வெளியிடப்பட்டு உள்ளது. இதன் மூலம் சைபர் குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றனர்.