< Back
தேசிய செய்திகள்
தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக 200 யூனிட் இலவச மின்சாரத்திற்கு விண்ணப்பிப்பது திடீர் தள்ளிவைப்பு
தேசிய செய்திகள்

தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக 200 யூனிட் இலவச மின்சாரத்திற்கு விண்ணப்பிப்பது திடீர் தள்ளிவைப்பு

தினத்தந்தி
|
14 Jun 2023 6:45 PM GMT

தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக 200 யூனிட் இலவச மின்சாரத்திற்கு விண்ணப்பிப்பது திடீரென்று தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வருகிற 18-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

பெங்களூரு:

தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக 200 யூனிட் இலவச மின்சாரத்திற்கு விண்ணப்பிப்பது திடீரென்று தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வருகிற 18-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

திடீர் தள்ளிவைப்பு

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. அதன்படி, மாநிலத்தில் ஆட்சி அமைத்துள்ள காங்கிரஸ் அரசு 200 யூனிட் இலவச மின்சாரம் யாருக்கெல்லாம் வழங்கப்படும், எப்போது அந்த திட்டம் அமலுக்கு வரும் என்பது குறித்து முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார். அதாவது மாநிலத்தில் 2.14 கோடி பேருக்கு இந்த 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும், 200 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோர் முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

200 யூனிட் இலவச மின்சாரம் பெறுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தாலும், அந்த இலவச திட்டத்திற்கு தகுதி படைத்தவர்கள் ஜூன் 15-ந் தேதி(அதாவது இன்று) முதல் அடுத்த மாதம் ஜூலை 15-ந்தேதி வரை அந்த திட்டத்தை பெற விரும்புவோர் 'சேவா சிந்து' செல்போன் செயலி மூலமாக விண்ணப்பிக்க வேண்டும் என்று கர்நாடக அரசு அறிவித்திருந்தது.

வருகிற 18-ந் தேதி விண்ணப்பிக்கலாம்

இந்த நிலையில், 200 யூனிட் இலவச மின்சாரத்திற்கு இன்று (வியாழக்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்திருந்ததை அரசு திடீரென்று தள்ளி வைத்துள்ளது. அதாவது தகவல் தொழில் நுட்ப பிரச்சினை உள்ளிட்ட காரணங்களுக்காக இன்று முதல் விண்ணப்பிப்பது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வருகிற 18-ந் தேதி முதல் 200 யூனிட் இலவச மின்சாரம் பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்று கர்நாடக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

200 யூனிட் இலவச மின்சாரத்திற்கு தகுதி படைத்த 2.14 கோடி பேர் ஒரே நேரத்தில் விண்ணப்பிக்க முன் வரும் பட்சத்தில் 'சேவா சிந்து' செயலியில் தொழில் நுட்ப கோளாறு ஏற்படும் என்பதால், அதில் உள்ள தொழில்நுட்ப பிரச்சினைகளை சரி செய்வதற்காக இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் தேதி வருகிற 18-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்