மின்கட்டணம் செலுத்தாமல் அடம்பிடிக்கும் கிராம மக்கள்
|காங்கிரஸ் கட்சி 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்ததால், கிராமங்களில் மக்கள் மின்சார கட்டணம் செலுத்தாமல் அடம்பிடிக்கிறார்கள். இதனால் மின்வாரிய ஊழியர்கள் திணறி வருகிறார்கள்.
பெங்களூரு:
காங்கிரஸ் கட்சி 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்ததால், கிராமங்களில் மக்கள் மின்சார கட்டணம் செலுத்தாமல் அடம்பிடிக்கிறார்கள். இதனால் மின்வாரிய ஊழியர்கள் திணறி வருகிறார்கள்.
காங்கிரஸ் உத்தரவாதம்
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் உள்பட 5 முக்கிய வாக்குறுதிகளை அளித்தது. மேலும் அந்த வாக்குறுதிகளுக்கு உத்தரவாத அட்டையும் காங்கிரஸ் வழங்கி வந்தது. டி.கே.சிவக்குமார் பிரசாரத்துக்கு சென்ற இடங்களில் எல்லாம் ஜூன் மாதம் முதல் மக்கள் யாரும் மின்கட்டணம் செலுத்த வேண்டாம் என்று கூறி வந்தார்.
இந்த நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சி தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துள்ளது. இதனால், கிராமப்புறங்களில் உள்ள மக்கள் மின்கட்டணம் செலுத்த மறுக்கும் சம்பவங்கள் நடந்து வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சித்ரதுர்காவுக்கு மின் மீட்டரில் பதிவான மின்சார அளவை கணக்கீடு செய்ய சென்ற பெஸ்காம் ஊழியர்களை பொதுமக்கள் தடுத்து, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துள்ளால் மின்கட்டணம் செலுத்த மாட்டோம் என்று கூறி அவர்களை மின் அளவை கணக்கீடு செய்யவிடாமல் தடுத்தனர். இதனால் அவர்கள் செய்வதறியாது திரும்பி சென்றனர்.
இதேபோல், சிக்பள்ளாப்பூரில் மின் மீட்டர் பெட்டியில் மின்கட்டணம் செலுத்த மாட்டோம் என்று எழுதி வைத்துள்ளனர்.
மின்சார கட்டணம் செலுத்த...
இந்த நிலையில் சாம்ராஜ்நகர் மாவட்டம் எலந்தூர் தாலுகா ஹொன்னூரில் செஸ்காம் (சாமுண்டீஸ்வரி மின்சார வாரியம்) ஊழியர்கள் மின்சார ரீடிங் எடுக்க வந்துள்ளனர். அப்போது அவர்களை தடுத்த அந்தப்பகுதி மக்கள், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்று சித்தராமையா அறிவித்துள்ளார். காங்கிரசும் எங்களுக்கு உத்தரவாத அட்டை வழங்கி உள்ளது. பின்னர் நீங்கள் ஏன் மின்சாரத்தை கணக்கீடு செய்ய வந்துள்ளீர்கள். நாங்கள் மின்சார கட்டணம் செலுத்தமாட்டோம்.
அப்போது செஸ்காம் ஊழியர்கள், ஜூன் மாதம் முதல் தான் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது என்று கூறினர். ஆனாலும் மக்கள் அதனை ஏற்க மறுத்து அவர்களை அங்கிருந்து திருப்பி அனுப்பி வைத்தனர்.
ஊழியர்களுடன் வாக்குவாதம்
இதேபோல், ராய்ச்சூர் மாவட்டம் மாஸ்கி பகுதியில் மின் ரீடிங் எடுக்க சென்ற மின்வாரிய ஊழியருடன் பெண் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். காங்கிரஸ் அரசு வந்துவிட்டது நாங்கள் மின்சார கட்டணம் செலுத்த மாட்டோம் என்று மின்வாரிய அதிகாரியை திட்டி திருப்பி அனுப்பி உள்ளார்.
மேலும், துமகூரு மாவட்டம் கொரட்டகெேர அருகே டி.கொல்லஹள்ளியிலும் மின் ரீடிங் எடுக்க வந்த பெஸ்காம் அதிகாரிகளை மூதாட்டி ஒருவர் விரட்டி அடித்த சம்பவம் நடந்துள்ளது. அவர், ராகுல்காந்தி, சித்தராமையா, டி.கே.சிவக்குமாரிடம் சென்று மின்சார கட்டணத்தை கேளுங்கள். நாங்கள் செலுத்தமாட்டோம் என்று கூறினார்.
இதுமட்டுமின்றி மாநிலம் முழுவதும் கிராமப்புற மக்கள் மின்சார கட்டணம் செலுத்தாமல் அடம்பிடித்து வருகிறார்கள். இதனால் மின்வாரிய ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.