கடந்த ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி புழக்கத்தில் ரூ.31 லட்சம் கோடி ரொக்கம் - நிர்மலா சீதாராமன்
|நாட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி, ரூ.31 லட்சத்து 33 ஆயிரம் கோடி ரொக்கம், புழக்கத்தில் இருப்பதாக நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் கூறினார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின்போது மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-
நாட்டில் கடந்த 2014-ம் ஆண்டு ரூ.13 லட்சம் கோடி கரன்சி மட்டுமே புழக்கத்தில் இருந்தது. இது, கடந்த ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி, ரூ.31 லட்சத்து 33 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. இது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13.7 சதவீதம் ஆகும்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையை தொடர்ந்து, 2017-ம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி, புழக்கத்தில் இருந்த கரன்சி ரூ.13 லட்சத்து 35 ஆயிரம் கோடியாக குறைந்தது. ஆனால் அதன்பிறகு அதிகரித்தபடி சென்றது.
2018-ம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி, ரூ.18 லட்சத்து 29 ஆயிரம் கோடி கரன்சியும், 2019-ம் ஆண்டு ரூ.21 லட்சத்து 36 ஆயிரம் கோடி கரன்சியும், 2020-ம் ஆண்டு ரூ.24 லட்சத்து 47 ஆயிரம் கோடி கரன்சியும், 2021-ம் ஆண்டு ரூ.28 லட்சத்து 53 ஆயிரம் கோடி கரன்சியும் புழக்கத்தில் இருந்தன.
குறைவான ரொக்க பயன்பாடு கொண்ட பொருளாதாரத்தை நோக்கி செல்வதே மத்திய அரசின் நோக்கம்.
டிஜிட்டல் ரூபாய்
இந்தியாவில், கடந்த ஆண்டு இறுதியில் சோதனை அடிப்படையில் டிஜிட்டல் ரூபாய் அறிமுகப்படுத்தப்பட்டது.
கடந்த பிப்ரவரி 28-ந் தேதி நிலவரப்படி, மொத்தவிலை பிரிவில், ரூ.126 கோடியே 27 லட்சமும், சில்லரை விலை பிரிவில் ரூ.4 கோடியே 14 லட்சமும் என மொத்தம் ரூ.131 கோடி டிஜிட்டல் ரூபாய் புழக்கத்தில் உள்ளது என்று அவர் கூறினார்.
'செபி' விசாரணை
மக்களவை கேள்வி நேரத்தில் மத்திய நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி கூறியதாவது:-
அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான 'செபி' விசாரணை நடத்தி வருகிறது.
ஹிண்டன்பர்க் அறிக்கையை தொடர்ந்து, பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள அதானி குழுமத்தின் 9 நிறுவனங்களின் சந்தை மூலதனம் 60 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது என்று அவர் கூறினார்.
ரூ.1.48 லட்சம் கோடி கூடுதல் செலவினம்
நடப்பு நிதியாண்டில், 2-வது தொகுப்பு துணை மானிய கோரிக்கைகளை மத்திய நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி தாக்கல் செய்தார்.
அதில், ரூ.1 லட்சத்து 48 ஆயிரம் கோடி நிகர கூடுதல் செலவினங்களுக்கு மக்களவையின் ஒப்புதல் கோரப்பட்டது. இவற்றில், உர மானியத்துக்கு மட்டும் ரூ.36 ஆயிரம் கோடி செலவிடப்படுகிறது.
மாநிலங்களவை கேள்வி நேரத்தில் ராணுவ இணை மந்திரி அஜய் பட் கூறியதாவது:-
உத்தரபிரதேச மாநிலம் கோர்வாவில் உள்ள இந்திய-ரஷிய கூட்டு ஆயுத தொழிற்சாலையில், கலாஷ்னிகோவ் ஏ.கே.203 ரக துப்பாக்கிகள் தயாரிப்பு நடந்து வருகிறது. அவற்றை பரிசோதிக்கும் பணியும் நடந்து வருகிறது என்று அவர் கூறினார்.
'ஏர்போர்ஸ் ஒன்'
'இந்திய ஏர்போர்ஸ் ஒன்' விமானங்களின் கொள்முதல் செலவு பற்றி கேட்டதற்கு அவை பற்றி எந்த தகவலும் சொல்லக்கூடாது என்று அஜய்பட் கூறினார்.
மற்றொரு கேள்விக்கு பதில் அளிக்கையில், 2024-2025 நிதியாண்டுக்குள் பாதுகாப்பு தளவாட உற்பத்தியை ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் கோடியாக உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து இருப்பதாக அஜய் பட் கூறினார்.
பள்ளி செல்லாத குழந்தைகள்
மக்களவை கேள்வி நேரத்தில் மத்திய கல்வித்துறை இணை மந்திரி அன்னபூர்ணா தேவி கூறியதாவது:-
நாடு முழுவதும் தொடக்கப்பள்ளி செல்லும் வயதில், 9 லட்சத்து 30 ஆயிரம் குழந்தைகள், பள்ளிக்கு செல்லாமல் உள்ளனர். இவர்களில் ஆண் குழந்தைகள் 5 லட்சத்து 2 ஆயிரம் பேர் ஆவர். மற்றவர்கள் பெண் குழந்தைகள்.
அதிகபட்சமாக, உத்தரபிரதேசத்தில் 3 லட்சத்து 96 ஆயிரம் குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் உள்ளனர் என்று அவர் கூறினார்.