< Back
தேசிய செய்திகள்
காசி-தமிழ்நாடு இடையே கலாசார தொடர்பு... தமிழை பாதுகாப்பது நமது கடமை வாரணாசியில் நடந்த சங்கம விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
தேசிய செய்திகள்

காசி-தமிழ்நாடு இடையே கலாசார தொடர்பு... தமிழை பாதுகாப்பது நமது கடமை வாரணாசியில் நடந்த சங்கம விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

தினத்தந்தி
|
20 Nov 2022 12:43 AM IST

காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே கலாசார தொடர்பு உள்ளது, தமிழை பாதுகாப்பது 130 கோடி மக்களின் கடமை என்று வாரணாசியில் நடந்த சங்கம விழாவை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

'காசி தமிழ் சங்கமம்' என்ற வார்த்தைகள் நாடெங்கும் ஒரே நாளில் பிரபலமாகி இருக்கின்றன.

'காசி தமிழ் சங்கமம்'

'காசி தமிழ் சங்கமம்' வடக்கே உள்ள காசிக்கும், தெற்கே உள்ள நமது தமிழ்நாட்டுக்கும் இடையேயான பழங்கால தொடர்புகளை கண்டறிந்து, அவற்றைஇன்றைய தலைமுறைக்கு கொண்டுவந்து சேர்க்கிறஅற்புதமான திட்டம் ஆகும்.

சுதந்திரம் பெற்றதன் 75-வது ஆண்டு நிறைவையொட்டிய சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவை நாடு கொண்டாடியுள்ள இந்த அழகான தருணத்தில், மத்திய அரசு அமல்படுத்தியுள்ள 'ஒரே இந்தியா, உன்னத இந்தியா' என்ற திட்டத்தின் ஒரு அங்கமாகவும் இந்த திட்டம் அமைந்துள்ளது. ஒரு மாத காலம் இந்த 'காசி தமிழ் சங்கமம்' நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இதற்கான ஏற்பாடுகளை பனாரஸ் இந்து பல்கலைக்கழகமும், சென்னை இந்திய தொழில் நுட்ப கழகமும் (ஐ.ஐ.டி) சீரும், சிறப்புமாய் செய்துள்ளன. இந்த 'காசி தமிழ் சங்கமம்' வாரணாசியில் புதிய எழுச்சியை, மறுமலர்ச்சியை, விழாக்கோலத்தை காண செய்துள்ளது.

வேட்டி கட்டி வந்த பிரதமர்



பனாரஸ் இந்து பல்கலைக்கழக வளாகத்தில் இதைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி-சட்டையில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு வந்தார். அவரை உத்தரபிரதேச மாநில கவர்னர் ஆனந்தி பென் படேல், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் வரவேற்றனர். விழா மேடையில் பிரதமர் மோடியை மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான், தகவல்-ஒலிபரப்புத்துறை ராஜாங்க மந்திரி எல்.முருகன், முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, இசையமைப்பாளர் இளையராஜா, பனாரஸ் இந்து பல்கலைக்கழக துணைவேந்தர் சுதிர் ஜெயின், சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி ஆகியோர் வரவேற்றனர். அதைத் தொடர்ந்து விழா தொடங்கியது.

பிரதமர் மோடிக்கு தர்மேந்திர பிரதான் சால்வை அணிவித்து காசி தமிழ்சங்கம விழா கேடயத்தை வழங்கினார். 'காசி தமிழகம் நெடுங்கால தொடர்பு' என்ற புத்தகத்தை பிரதமர் மோடிக்கு பொன் ராதாகிருஷ்ணன் வழங்கினார். மத்திய மந்திரி எல்.முருகன் வரவேற்று பேசினார். தமிழ்நாட்டுக்கும், காசிக்கும் உள்ள தொடர்புகளை அவர் விளக்கினார். தொடர்ந்து உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோர் வாழ்த்திப்பேசினார்கள்.

அற்புத சங்கமம்

பிரதமர் மோடி விழாவைத் தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வணக்கம் காசி. வணக்கம் தமிழகம். யாதும் ஊரே, யாவரும் கேளிர்...

வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் நான் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கிறேன். உலகின் மிகப்பழமையான நகரத்தில் இந்த விழா நடைபெறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது மகத்தான, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விழா ஆகும்.

இது இந்தியாவின் கலாசாரம் மற்றும் தமிழ் மொழியின் அழகு ஆகியவற்றின் அற்புதமான சங்கமம் ஆகும்.

இந்தியாவில் கலாசாரம் மற்றும் பாரம்பரியங்களின் ஒவ்வொரு சங்கமமும் கொண்டாடப்படுகிறது; மதிக்கப்படுகிறது.

புனிதமானது

உண்மையில், இது இந்தியாவின் வலிமை மற்றும் குணாதிசயங்களின் கொண்டாட்டம் ஆகும். இதனால் காசி-தமிழ் சங்கமம் தனித்துவமாக மிளிர்கிறது.

ஒரு வகையில், காசி இந்தியாவின் கலாசார தலைநகரமாகும். அதே நேரத்தில் தமிழ்நாடும், தமிழ் கலாசாரமும் இந்தியாவின் பழமையின், பெருமையின் மையமாக அமைந்துள்ளன.

காசி-தமிழ் சங்கமம், கங்கை, யமுனை போன்று புனிதமானது. அது முடிவில்லாத வாய்ப்புகளையும், வலிமையையும் தன்னுள் அடக்கி உள்ளது.

ராமேசுவரம்- தென்காசி

காசியும், தமிழ்நாடும் நமது கலாசாரம், நாகரிகத்தின் காலத்தால் அழியாத மையங்கள் ஆகும். தமிழும், சமஸ்கிருதமும் மிகப்பழமையான மொழிகள். காசியில் நாம் விஸ்வநாதரைப் பெற்றிருக்கிறோம். தமிழ்நாட்டில் ராமேசுவரத்தை பெற்றிருக்கிறோம்.

காசியும், தமிழ்நாட்டின் காஞ்சீபுரமும் 7 முக்கிய நகரங்களில் பிரபலமானவை.

தமிழ்நாட்டில் பிரபலமான தென்காசியும் இருக்கிறது.

அது இசையாக இருக்கட்டும், இலக்கியமாக இருக்கட்டும் அல்லது கலையாக இருக்கட்டும், காசியும், தமிழ்நாடும் கலைக்கான ஆதாரங்களாக இருந்து வந்துள்ளன. தமிழ்நாடும், காசியும் இந்தியாவின் தலைசிறந்த ஆன்மிகவாதிகளின் பிறப்பிடமாகவும், அவர்கள் ஆன்மிக சேவையாற்றிய இடங்களாகவும் உள்ளன.

பந்தம்

காசியிலும், தமிழ்நாட்டிலும் ஒரே போன்ற சக்தியை நாம் அனுபவிக்க முடியும். இன்றைக்கும் தமிழ் திருமண நிகழ்ச்சியில் காசி யாத்திரை என்ற சடங்கு, முக்கிய பங்கு வகிக்கிறது. காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் நீண்ட பந்தம் உண்டு.

காசியிலே துளசிதாசர் பிறந்தார், தமிழ்நாட்டில் திருவள்ளுவர் பிறந்து தமிழை மேன்மைப்படுத்தினார்.

வேத அறிஞரான ராஜேஷ்வர் சாஸ்திரி காசியில் வாழ்ந்தவர். ஆனால் அவர் தமிழ்நாட்டில் வேரைக் கொண்டிருந்தவர்.

காசி-தமிழ் சங்கமம், இந்தியா சுதந்திர திருநாளின் நூற்றாண்டை நோக்கி பயணிக்கிற காலத்தில் நடக்கிறது. இந்தியா பல்லாண்டு கால இயற்கையான கலாசார ஒற்றுமை கொண்ட நாடு ஆகும்.

சுவாமி குமரகுருபரர் காசிக்கு வந்து அதைத் தனது கர்மபூமி ஆக்கினார். அவர் காசியில் கேதாரேஷ்வர் கோவிலைக்கட்டினார். அவரது சீடர்கள் தஞ்சாவூரில் காவிரி நதிக்கரையில் காசிவிஸ்வநாதர் கோவிலைக் கட்டினார்கள்.

காசியை கட்டமைத்ததில் தமிழர்களுக்குப் பங்கு இருக்கிறது. சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், பனாரஸ் இந்துபல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கு உதவியாக இருந்திருக்கிறார்.

பாரதியார் வாழ்ந்த காசி

தமிழ்நாட்டில் சுப்பிரமணிய பாரதியார் என்றொரு மாபெரும் ஆளுமை உண்டு. அவர் ஒரு மகாகவி; அவர் சுதந்திரப் போராட்ட வீரரும் ஆவார். அவர் நீண்ட காலம் இந்த காசியிலே வாழ்ந்தார். இங்கே அவர் படித்திருக்கிறார்.

சுப்பிரமணிய பாரதியார், தனது மிடுக்கான முறுக்குமீசையை வளர்க்கத்தொடங்கியது, இந்தக் காசியில்தான். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் அவருக்கென்று ஒரு இருக்கை அர்ப்பணிக்கப்பட்டிருப்பது, அந்தப் பல்கலைக்கழகத்தின் பெருமையை உயர்த்தி உள்ளது.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடியவர்

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலைப் பாடியவர் மனோன்மணியம் சுந்தரனார் ஆவார். ஆனால் அவரது குரு காசியில் இருந்தார். வடக்கையும், தெற்கையும் இணைப்பதில் ராஜாஜியின் ராமாயணம் மற்றும் மகாபாரதத்துக்கு பங்கு உள்ளது. தென் இந்தியாவில் தோன்றிய அறிஞர்களான ராமானுஜர், சங்கராச்சாரியார், ராஜாஜி, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ஆகியோரைப் புரிந்து கொள்ளாமல், இந்திய தத்துவத்தை நாம் புரிந்து கொள்ள முடியாது. இது எனது அனுபவம் ஆகும்.

ஒரு செழுமையான பாரம்பரியம் கொண்ட நாடு அதன் மரபு குறித்து பெருமை கொள்ள வேண்டும்.

130 கோடி மக்களின் கடமை

உலகின் மிகப் பழமையான மொழிகளில் ஒன்று, தமிழ் மொழி ஆகும். இருந்தபோதிலும், அதை முழுமையாகக் கவுரவிக்கவில்லை.

தமிழ் மொழியின் பாரம்பரியத்தைப் பாதுகாத்து வளப்படுத்துவது 130 கோடி இந்தியர்களின் கடமை ஆகும். நாம் தமிழ் மொழியைப் புறக்கணித்தால் நாட்டுக்குப் பெரும்கேடு விளைவித்ததாகி விடும். தமிழைக் கட்டுப்பாடுகளுக்குள் அடைத்து வைத்தால் அதற்குப் பெரும் கேடு செய்ததாகிவிடும். மொழி வேறுபாடுகளை நீக்கி, உணர்வுபூர்வமான ஒற்றுமையை நாம் நிலைநாட்ட வேண்டும்.

'மரமாக மாற வேண்டும்'

தமிழகம் மற்றும் பிற தென்மாநிலங்களில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். நாட்டின் பிற பகுதிகளில் இருந்து இளைஞர்கள் வருகை தந்து அங்குள்ள கலாசாரத்தை உள்வாங்கிக்கொள்ள வேண்டும்.

இந்த சங்கமத்தின் ஆதாயங்களை ஆராய்ச்சி மூலம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும், இந்த விதை, ஒரு மாபெரும் மரமாக மாற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இளையராஜாவின் இசை



இந்த விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றிருந்தன. அனைத்துக்கும் முத்தாய்ப்பாய் அமைந்தது, நமது தமிழ்நாட்டின் இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி என்றால் அது மிகையல்ல.

இந்த நிகழ்ச்சியில் அவர் குழுவினருடன் 'ஜனனி ஜனனி' என்ற பாடலையும், திருவாசக பாடலையும், 'ஹரஹரமகாதேவா' ஆகிய பாடலையும் பாடினர். இந்தப்பாடல்களை பிரதமர் மோடியும், விழாவில் பங்கேற்ற பிரமுகர்களும், பார்வையாளர்களும் கைதட்டி ரசித்தனர்.

9 ஆதீனங்களுக்கு சிறப்பு

இந்த விழாவுக்கு தமிழ்நாட்டின் 9 ஆதீனங்கள் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கென்று விழா மேடை எதிரே தனி மேடையும், இருக்கைகளும் போடப்பட்டிருந்தன.

தமிழ்நாட்டில் இருந்து 2,500 பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.

பா.ஜ.க. மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்