போதைப்பொருள் வாங்க பணம் இல்லாததால் குழந்தைகளை விற்ற கொடூர பெற்றோர்
|விரைந்து செயல்பட்ட போலீசார், பிறந்து ஒரு மாதமேயான பெண் குழந்தையை மீட்டனர்
மும்பை,
போதைப்பொருள் வாங்க பணம் இல்லாததால் தனது இரண்டு குழந்தைகளை விற்ற பெற்றோர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மும்பையின் அந்தேரி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், தனது சகோதரன் மற்றும் அவரது மனைவி இருவரும் போதைப்பொருள் வாங்குவதற்காக தங்களது இரண்டு வயது ஆண்குழந்தை மற்றும் பிறந்து ஒரு மாதமேயான பெண்குழந்தை இருவரையும் ரூ.74 ஆயிரத்துக்கு வேறொரு நபரிடம் விற்றதாக தெரிவித்திருந்தார்.
இந்த புகாரையடுத்து விரைந்து செயல்பட்ட போலீசார், பிறந்து ஒரு மாதமேயான பெண் குழந்தையை மீட்டனர். தொடர்ந்து இரண்டு வயது ஆண்குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் இது தொடர்பாக குழந்தைகளின் தந்தை சபீர், தாய் சானியா கான் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், குழந்தைகளை விற்பனை செய்யும் முகவராக செயல்பட்ட உஷா ரத்தோட் என்பவரையும் குழந்தைகளை பணம் கொடுத்து வாங்கிய ஷகில் மக்ரானி ஆகியோரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.