< Back
தேசிய செய்திகள்
மது குடிக்க பணம் இல்லாததால் 4 மாத பெண் குழந்தையை ரூ.100-க்கு விற்ற கொடூர தாய்
தேசிய செய்திகள்

மது குடிக்க பணம் இல்லாததால் 4 மாத பெண் குழந்தையை ரூ.100-க்கு விற்ற கொடூர தாய்

தினத்தந்தி
|
6 May 2024 9:18 AM IST

பெண் குழந்தையை விற்ற இளம்பெண்ணிற்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.

கொப்பல்,

கர்நாடக மாநிலம் கொப்பல் தாலுகாவில் உலிகி கிராமத்தில் 25 வயது பெண் ஒருவர் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வருகிறார். அவர் சாலையோரம், மண்டபங்களிலும் தங்கி வந்தார். அவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், சாலையில் சுற்றித்திரிந்த 25 வயது பெண்ணின் குழந்தை ஒன்றை விலைக்கு வாங்கி உள்ளார். இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்களுக்கு தெரியவந்தது. உடனே அவர்கள் அந்த பெண்ணை சந்தித்து பேசினர்.

பின்னர் விலை கொடுத்து வாங்கப்பட்ட குழந்தையை மீட்டு கொப்பல் மாவட்ட குழந்தைகள் மேம்பாட்டு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது சாலையில் சுற்றிய பெண்ணுக்கு மதுகுடிக்கும் பழக்கம் உள்ளது. ஏற்கனவே 2 குழந்தைகள் அவருக்கு உள்ள நிலையில் 3-வதாக அவருக்கு 4 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

இந்த நிலையில் மது குடிப்பதற்கு பணம் இல்லாததால் 4 மாத பெண் குழந்தையை அந்த பெண், அதேப்பகுதியை சேர்ந்த ஒருவருக்கு ரூ.100-க்கு விற்பனை செய்தது தெரியவந்தது. ஏற்கனவே அந்த பெண் இதேபோல் மற்றொரு குழந்தையையும் விற்று இருக்கலாம் என கூறப்படுகிறது. மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள அந்த பெண் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதையடுத்து குழந்தையின் தாயை அதிகாரிகள் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்