< Back
தேசிய செய்திகள்
மனைவியின் கால்களை சுத்தியலால் அடித்து உடைத்த கொடூர கணவன்
தேசிய செய்திகள்

மனைவியின் கால்களை சுத்தியலால் அடித்து உடைத்த கொடூர கணவன்

தினத்தந்தி
|
18 May 2024 5:25 AM IST

பலத்த காயம் அடைந்த மனைவிக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பாலோடு பகுதியை சேர்ந்தவர் சோஜி (வயது42), கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ஷைனி (36). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் ஷைனி கடந்த ஒரு ஆண்டாக கணவரை விட்டு பிரிந்து குழந்தைகளுடன் திருவனந்தபுரம் மயிலாமூட்டில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் அங்கு சென்ற சோஜி, தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு மனைவியிடம் கூறினார். மேலும் இது தொடர்பாக பேச வேண்டும் என்று கூறி ஷைனியை மோட்டார் சைக்கிளில் பாலோடு, கரிமண்கோடு வனப்பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு தனியாக இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதில் ஆத்திரமடைந்த சோஜி, தன்னிடம் இருந்த கத்தியால் ஷைனியை வெட்டினார். இதில் நிலை குலைந்த அவர் கீழே விழுந்தார். அதன்பிறகு ஆத்திரம் அடங்காத சோஜி தான் வைத்திருந்த சுத்தியலால் ஷைனியின் இரு கால்களிலும் முழங்கால் பகுதியில் தொடர்ச்சியாக அடித்தார். இதில் அவரது இரண்டு கால்களும் உடைந்து ரத்தம் கொட்டியது. ஷைனி வலி தாங்க முடியாமல் அலறினார். ஆனாலும், இரக்கமின்றி சோஜி தொடர்ந்து தாக்கினார்.

அத்துடன் கால்கள் உடைந்து ரத்தம் சொட்ட சொட்ட தரையில் கிடந்த மனைவியின் மீது தனது மோட்டார் சைக்கிளை ஏற்றிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார். ஷைனியின் அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்ற சிலர் விரைந்து வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் இருந்த ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த கொடூர தாக்குதல் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சோஜி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மனைவி மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதற்கான காரணம் குறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவர் தாக்கியதில் ஷைனிக்கு முழங்கால்கள், தலை மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குடும்ப தகராறில் பிரிந்து வாழும் மனைவியின் கால்களை கணவர் சுத்தியலால் அடித்து உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்