மணிப்பூரில் பதற்றமான சூழலுக்கு மத்தியில் இன்று சட்டப்பேரவை கூடுகிறது
|மணிப்பூரில் பரபரப்பான சூழலில் இன்று அம்மாநில சட்டப்பேரவை கூடுகிறது. அங்கு தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவும் நிலையில் இன்று ஒருநாள் மட்டும் கூடும் சட்டமன்ற கூட்டத்தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இம்பால்,
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த மே மாதம் இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. பெரும்பான்மையாக வசிக்கும் குக்கி இன மக்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கு மெய்தி இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக இரு பிரிவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறைக்கு இதுவரை 170 பேர் பலியாகியுள்ளனர்.
ஆயிரக்கணக்கான மக்கள் வன்முறையால் பாதிக்கப்பட்டு தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். மணிப்பூரில் தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக மத்திய அமைச்சர் பி எல் வெர்மா கூறினார். எனினும் நேற்று முன் தினம் கூட இம்பால் மேற்கு மாவட்டத்தில் மூன்று வீடுகளுக்கு ஒரு கும்பல் தீ வைத்தது. அதோடு பாதுகாப்பு படையினரின் ஆயுதங்களையும் பறித்து சென்றது.
இதனால், அங்கு பதற்றம் தணிந்தபாடில்லை. இத்தகைய பரபரப்பான சூழலில், மணிப்பூரில் இன்று சட்டப்பேரவை கூடுகிறது. இன்று ஒருநாள் மட்டுமே சட்டமன்றம் நடைபெறுகிறது. இன்று நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தில் இனமோதல் தொடர்பாக சில தீர்மானங்கள் கொண்டு வரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.