எல்லையில் போதைப்பொருள், ஆயுதங்கள் கடத்தல்; 3 ஆண்டுகளில் 28 டிரோன்கள் பறிமுதல் - மத்திய அரசு தகவல்
|கடந்த 3 ஆண்டுகளில் 28 டிரோன்கள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை இணை மந்திரி நிசித் பிரமாணிக் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய உள்துறை இணை மந்திரி நிசித் பிரமாணிக், பாகிஸ்தானில் இருந்து பஞ்சாபிற்கு ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருட்களை கடத்துவதற்காக தேச விரோதிகள் மற்றும் கடத்தல்காரர்கள் ட்ரோன்களைப் பயன்படுத்துவதாகவும், கடந்த 3 ஆண்டுகளில் இதுபோன்ற 28 டிரோன்கள் மீட்கப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
சர்வதேச எல்லையில் எல்லைப் பாதுகாப்புப் படை (பி.எஸ்.எஃப்.) ரோந்து, தடுப்பு அமைத்தல், கண்காணிப்புச் சாவடிகளை நிர்வகித்தல் போன்றவற்றை 24 மணி நேரமும் கண்காணிப்பதன் மூலம் எல்லைகளில் திறம்பட ஆதிக்கம் செலுத்துகிறது என்றும் அவர் கூறினார்.
ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் தவிர டிரோன்களில் இருந்து 125.174 கிலோ ஹெரோயின், 0.100 கிலோ அபின், ஒரு 9 மிமீ அளவு பிஸ்டல், 7 கைத்துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளதாகவுன், டிரோன்களைக் கையாள்வதில் உள்ள தொழில்நுட்பத்தை மதிப்பிடுவதற்கும் அதன் செயல்திறனைச் சான்றளிப்பதற்கும் தொழில்நுட்பக் குழு நிறுவப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.